கிரிக்கெட்

பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல்

பெண்கள் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

மான்செஸ்டர்,

பெண்களுக்கான 10-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் மான்செஸ்டரில் இன்று (வியாழக்கிழமை) இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு நடைபெறும் 23-வது லீக் ஆட்டத்தில் (குரூப் 1) இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகளை பந்தாடியது. முந்தைய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் வீழ்ந்தது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் நன்றாக ஆடினாலும், மிடில் வரிசை பேட்டிங் சொதப்புகிறது.

அத்துடன் கடந்த ஆட்டத்தில் பீல்டிங்கும் மெச்சும்படி இல்லை. இந்த குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியது அவசியமானதாகும். அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்தியா கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியுடன் இந்த ஆட்டத்தில் களம் காணுகிறது.

வங்காளதேச அணி

நிகார் சுல்தானா தலைமையிலான வங்காளதேச அணி முதலாவது ஆட்டத்தில் நெதர்லாந்தை தோற்கடித்தது. அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் பணிந்தது. கடந்த ஆட்டத்தில் 23 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வெளியேற்றியது. அந்த வெற்றி உத்வேகத்துடன் கால் பதிக்கிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை சர்வதேச 20 ஓவர் போட்டியில் 23 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 20-ல் இந்தியாவும், 3-ல் வங்காளதேசமும் வென்றுள்ளன. இந்த ஆட்டத்தில் இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்ஆப்பிரிக்கா- நெதர்லாந்து

பிரிஸ்டலில் இரவு 11 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா- நெதர்லாந்து (குரூப் 1) அணிகள் சந்திக்கின்றன. லாரா வோல்வார்ட் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி 3 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, ஒரு தோல்வி கண்டுள்ளது. அறிமுக அணியான நெதர்லாந்து 3 ஆட்டங்களிலும் தோற்று அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்டது.

தென்ஆப்பிரிக்க அணிக்கும் இது வாழ்வா-சாவா மோதல் தான். ஆனால் நெதர்லாந்து சிறிய அணி என்பதால் பெரிய அளவில் வெற்றி பெற்று ரன் ரேட்டை மேம்படுத்திக் கொள்ள ஆர்வம் காட்டும். இவ்விரு அணிகளும் இதற்கு முன்பு 20 ஓவர் போட்டியில் ஒரே ஒருமுறை மோதியதில் அதில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தானின் பரிதாபம்

முன்னதாக லண்டன் லீட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி 113 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை (குரூப் 1) விரட்டியடித்து தொடர்ச்சியாக 4-வது வெற்றியை சுவைத்தது. இதில் எலிஸ் பெர்ரி (71 ரன்) அரை சதத்தின் உதவியுடன் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 200 ரன் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 13.4 ஓவர்களில் 86 ரன்னில் சுருண்டு 4-வது தோல்விைய தழுவியது. எலிஸ் பெர்ரி ஆட்டநாயகி விருது பெற் றார்.