கிரிக்கெட்

ரோஹித் சர்மாவிற்கு இது கடைசி ஐபிஎல்லா?...வெளியேறுவாரா பாண்டியா ? - அஸ்வினின் கணிப்பு

ரோஹித் சர்மா அடுத்த ஐ.பி.எல். தொடருடன் ஓய்வு பெறலாம் என்று பேசப்பட்டு வருகிறது.

புதுடெல்லி,

மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா அடுத்த ஐ.பி.எல். தொடருடன் ஓய்வு பெறுவாரா, ஹர்திக் பாண்டியா அந்த அணியிலிருந்து வேறு அணிக்கு மாறுவாரா என்ற கேள்விகளுக்கு இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மா ஓய்வு பெறுவாரா?

ரோஹித் சர்மா அடுத்த ஐ.பி.எல். தொடருடன் ஓய்வு பெறலாம் என்று பேசப்பட்டு வருகிறது. ஆனால், அவரது ஓய்வு குறித்து இப்போதே முடிவெடுக்க முடியாது என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “ரோஹித் சர்மா இன்னும் ஓராண்டு விளையாடுவாரா அல்லது அதற்கும் மேலும் தொடர்வாரா என்பது எனக்கு தெரியாது. எம்.எஸ். தோனியும் ஓய்வு பெறப்போகிறார் என்று பலமுறை கூறப்பட்டது. ஆனால், அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வெளியேறுவாரா ஹர்திக்?

ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வேறு அணிக்கு மாற வாய்ப்புள்ளதாகவும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

ஹர்திக்கை டிரேட் செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தால், அதற்கு பதிலாகப் பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து ஒரு சுழற்பந்து வீச்சாளரையோ அல்லது இந்திய இடதுகை வேகப்பந்து வீச்சாளரையோ மும்பை அணி பெற முயற்சி செய்யலாம் என்றும் அஸ்வின் கூறியுள்ளார்.

ஆனால், ஹர்திக் மும்பை அணியிலிருந்து வெளியேறுவது குறித்து இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இதனால் அடுத்த ஐ.பி.எல். தொடரில் மும்பை அணியின் வீரர்கள் மற்றும் தலைமைப் பொறுப்பில் மாற்றங்கள் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT