லண்டன்
பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு 171 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்து உள்ளது.
பெண்களுக்கான 10-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு விளையாடுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
இந்த போட்டித்தொடரில் இன்றுடன் லீக் சுற்று முடிவடைகிறது. குரூப் 1 பிரிவில் லண்டன் லார்ட்சில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகின்றன. இதில், டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டியது மிக அவசியம் ஆகும். 6 புள்ளிகளுடன் தனது பிரிவில் 2-வது இடம் வகிக்கும் இந்திய அணி, இதில் வெற்றி பெற்றால் சிக்கலின்றி அரை இறுதிக்கு முன்னேறும். மாறாக தோற்றால், 6 புள்ளியுடன் இருக்கும் தென்ஆப்பிரிக்க அணி, வங்காளதேசத்ததிடம் தோல்வி அடைந்தால்தான் இந்தியாவால் அரை இறுதியை எட்ட முடியும். அந்த வகையில் இந்த ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என பார்க்கப்படுகிறது.
இதன்பின்னர் போட்டியில், இந்திய தொடக்க வீராங்கனைகளான ஸ்மிரிதி மந்தனா (38), ஷெபாலி வர்மா (34) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் (34) எடுத்து ஆட்டமிழந்தபோதும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியாக விளையாடினார்.
அவர், 6 பவுண்டரிகள், 3 சிக்சர்களை பறக்க விட்டு, அரை சதம் (56) விளாசினார். ரிச்சா கோஷ் (1), தீப்தி ஷர்மா (4) இருவரும் அட்டமிழக்காமல் உள்ளனர். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்களை இந்தியா எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா தரப்பில் சோபி மோலினக்ஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனால், ஆஸ்திரேலிய அணிக்கு 171 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்து உள்ளது.