கிரிக்கெட்

'எப்போதும் எங்கள் தல நீங்கள்தான்'... தோனிக்காக ருதுராஜ் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு

தோனியிடம் இருந்து தான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் எளிமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை,

ஐ.பி.எல். போட்டிகளில் வீரராக இருந்து ஓய்வு பெற்றுள்ள மகேந்திர சிங் தோனி, 2027-ம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராகச் செயல்பட உள்ளார். இந்த நிலையில், தோனியுடன் இணைந்து விளையாடிய அனுபவங்களையும் அவரிடம் கற்றுக்கொண்ட பாடங்களையும் நினைவுகூர்ந்த சி.எஸ்.கே. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், அவருக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.

தோனி கற்றுக்கொடுத்த பாடம்

கடந்த 2019-ம் ஆண்டு சி.எஸ்.கே. அணியில் இணைந்தபோது தோனியை அருகில் இருந்து கவனித்ததாக ருதுராஜ் தெரிவித்துள்ளார். தோனியிடம் இருந்து தான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் எளிமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ருதுராஜ் கூறியிருப்பதாவது:

"எளிமை... இந்த வார்த்தையின் உண்மையான அர்த்தத்தை 2019-ம் ஆண்டு சி.எஸ்.கே. அணியில் இணைந்தபோது உங்களை அருகில் இருந்து கவனித்துக் கற்றுக்கொண்டேன். இத்தனை சாதனைகளைப் படைத்திருந்தாலும் நீங்கள் எளிமையாக இருப்பதைப் பார்த்து நிறைய கற்றுக்கொண்டேன்.

உங்களுடன் ஒரே ஓய்வறையில் இருப்பது, மைதானத்தில் இணைந்து விளையாடுவது, போட்டிகளை ஒன்றாக முடிப்பது என அனைத்தும் ஒரு கனவு நனவானது போன்ற அனுபவம்.

நீங்கள் எப்போதும் எங்கள் தலதான். எங்கள் கேப்டன், எங்கள் தலைவர். எல்லாவற்றுக்கும் நன்றி மாஹி பாய்" என்று தெரிவித்துள்ளார்.

2027 முதல் புதிய பொறுப்பு

கடந்த 2008-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடங்கியதில் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய அடையாளமாக இருந்து வந்தவர் தோனி. அந்த அணிக்காக 5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்று கொடுத்துள்ளார். மேலும், 2 முறை சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பையையும் வென்றுள்ளார்.

கடந்த 2024-ம் ஆண்டு சீசனுக்கு முன்னதாக சி.எஸ்.கே. அணியின் கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்தார். இருப்பினும், தொடர்ந்து வீரராக அணியில் இடம்பெற்று விளையாடி வந்தார்.

கடந்த 2026-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் காயம் காரணமாக தோனி ஒரு போட்டியில்கூட விளையாடவில்லை. இந்த நிலையில், ஐ.பி.எல். வீரராக தனது பயணத்தை முடித்துக்கொண்டு, 2027-ம் ஆண்டு முதல் சி.எஸ்.கே. அணியின் ஆலோசகராகப் புதிய பொறுப்பை ஏற்க உள்ளார்.

அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு தனது அனுபவங்களைப் பகிர்ந்து வழிகாட்டுவதுடன், அடுத்த தலைமுறை சி.எஸ்.கே. வீரர்களை உருவாக்குவதிலும் தோனி முக்கியப் பங்காற்ற உள்ளார்.

SCROLL FOR NEXT