கிரிக்கெட்

291 ரன்கள் முன்னிலை... ஆப்கானிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்கும் ஜிம்பாப்வே

ஆப்கானிஸ்தான் அணிக்கு அடுத்த இன்னிங்ஸில் கடினமான இலக்கு காத்திருக்கிறது.

ஷார்ஜா

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணி வலுவான நிலையில் உள்ளது. 3-வது நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 2-வது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் மொத்தம் 291 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

முதல் இன்னிங்ஸில் 339 ரன்கள்

ஷார்ஜாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 339 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் பிரெண்டன் டெய்லர் 217 பந்துகளில் 119 ரன்கள் விளாசினார். இன்னசென்ட் கையா 96 ரன்கள் எடுத்து சதத்தைத் தவறவிட்டார்.

ஆப்கானிஸ்தான் தரப்பில் நசீர் கான் மரூப்கில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

சுருண்ட ஆப்கானிஸ்தான்

இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 69.4 ஓவர்களில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அப்சர் ஜஜாய் அதிகபட்சமாக 63 ரன்கள் எடுத்தார். ரஹ்மானுல்லா ஜத்ரான் 34 ரன்களும், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 30 ரன்களும் சேர்த்தனர்.

ஜிம்பாப்வே தரப்பில் வின்சென்ட் மசெகேசா 4 விக்கெட்டுகளையும், பிளெஸ்ஸிங் முசரபானி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தடுமாற்றம்

122 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய ஜிம்பாப்வே அணிக்கு தொடக்கத்தில் விக்கெட்டுகள் விழுந்தன. இருப்பினும், பிரெண்டன் டெய்லர் 50 ரன்களும், இன்னசென்ட் கையா 33 ரன்களும் எடுத்தனர். கேப்டன் பிரையன் பென்னட் 28 ரன்கள் சேர்த்தார். ஆன்டம் நக்வி 20 ரன்கள் எடுத்தார்.

இதனால் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 58 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்துள்ளது. டபட்ஸ்வா சிகா 8 ரன்களுடனும், கிரேம் க்ரீமர் ரன் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது சலீம் சபி, ஜியாவுர் ரஹ்மான் ஷரீபி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இன்னும் 3 விக்கெட்டுகள் கைவசம் இருப்பதால், 4-வது நாளில் ஜிம்பாப்வே அணி தனது முன்னிலையை மேலும் அதிகரிக்க முயற்சிக்கும். ஏற்கனவே 291 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதால், ஆப்கானிஸ்தான் அணிக்கு அடுத்த இன்னிங்ஸில் கடினமான இலக்கு காத்திருக்கிறது.

SCROLL FOR NEXT