கால்பந்து

50,000-ல் இருந்து 50 லட்சம் பாலோயர்கள்... ஒரே போட்டியில் ரசிகர்களின் மனதை வென்ற கேப் வெர்டே கோல்கீப்பர்

இன்ஸ்டா பாலோயர்கள் எண்ணிக்கை 50,000ல் இருந்து சில மணி நேரங்களில் 50 லட்சமாக உயர்ந்துள்ளது.

அட்லாண்டா,

கால்பந்து உலக கோப்பையில் ஒரே போட்டியால் கேப் வெர்டே அணியின் கோல் கீப்பர் வோசின்யாவின் இன்ஸ்டா பாலோயர்கள் எண்ணிக்கை 50,000ல் இருந்து சில மணி நேரங்களில் 50 லட்சமாக உயர்ந்துள்ளது.

ஸ்பெயின் - கேப் வெர்டே மோதல்

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அட்லாண்டாவில் நேற்று நடைபெற்ற ‘எச்’ பிரிவு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் மற்றும் அறிமுக அணியான கேப் வெர்டே அணிகள் மோதின. போட்டிக்கு முன் ஸ்பெயின் எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேப் வெர்டே வீரர்கள் கடும் சவாலை கொடுத்தனர்.

ஸ்பெயின் தாக்குதல்... வோசின்யா தடுப்பு

போட்டி முழுவதும் பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஸ்பெயின் அணி தொடர்ந்து கோல் வாய்ப்புகளை உருவாக்கியது. ஆனால், கேப் வெர்டே கோல் கீப்பர் வோசின்யா அபாரமாக தடுத்தார். தொடர்ந்து ஸ்பெயின் வீரர்கள் தாக்குதலை தீவிரப்படுத்தியநிலையில், கேப் வெர்டேவின் தடுப்பு அரணை உடைக்க முடியவில்லை.

7 கோல் வாய்ப்புகளை தடுத்த 40 வயது ஹீரோ

40 வயதான கோல் கீப்பர் வோசின்யா போட்டி முழுவதும் ஸ்பெயின் அணியின் 7 கோல் வாய்ப்புகளை தடுத்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அவரது அபாரமான சேவ்களால் ஸ்பெயின் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போனது. இதன் காரணமாக போட்டி 0-0 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. மேலும், நடப்பு உலகக் கோப்பை தொடரில் கோல் எதுவும் அடிக்கப்படாத முதல் போட்டியாகவும் இது பதிவானது.

ஆட்டநாயகன் வோசின்யா

ஒரு முறை உலகக் கோப்பையும், 4 முறை யூரோ கோப்பையையும் வென்றுள்ள ஸ்பெயின் போன்ற ஜாம்பவான் அணியை கோல் அடிக்க விடாமல் தடுத்த வோசின்யாவே போட்டியின் நாயகனாக திகழ்ந்தார். இதைனையடுத்து இது தொடர்பான செய்தி வேகமாக இணையத்தில் பரவ அவரது பெயர் பிரபலமானது. இதன் காரணமாக இன்ஸ்டாகிராமில் பாலோயர்களின் எண்ணிக்கை 50,000ல் இருந்து சில மணி நேரங்களில் 50 லட்சமாக உயர்ந்துள்ளது.