மியாமி,
ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் (981 நாட்கள்) கழித்து பிரேசில் அணியின் மஞ்சள் ஜெர்சியை அணிந்து நெய்மர் களமிறங்கினார்.
23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. இதில் மியாமி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 3.30 மணிக்கு நடைபெற்ற 'சி' பிரிவு லீக் ஆட்டத்தில் பிரேசில் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் விளையாடின. இதில் ஸ்காட்லாந்து அணியை 3-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி பிரேசில் வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் மத்தேயுஸ் குன்ஹாவிற்குப் பதிலாக, நெய்மர் முன்னணி வீரராகக் களமிறக்கப்பட்டார். அதைக் கண்டு பிரேசிலிய ரசிகர்கள் மைதானத்தில் பெரும் ஆரவாரத்தை எழுப்பினர். ஆட்ட முடிவின்போது உணர்ச்சிப்பெருக்கால் மைதானத்திலேயே நெய்மார் கண்ணீர் விட்டார்.
கடைசியாக 2023 அக்டோபரில் தேசிய அணிக்காக விளையாடிய நெய்மர், ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் (981 நாட்கள்) கழித்து பிரேசில் அணியின் மஞ்சள் ஜெர்சியை அணிந்து களமிறங்கினார். இதுகுறித்து அவர், "என் வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான மற்றும் உணர்ச்சிகரமான நாட்களில் இதுவும் ஒன்று" என்று நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இன்றைய ஆட்டத்தில் விளையாடியதன் மூலம் தொடர்ந்து நான்கு உலகக் கோப்பைத் தொடர்களில் (2014, 2018, 2022, மற்றும் தற்போது 2026) விளையாடிய வீரர்களின் பட்டியலில் நெய்மரும் இணைந்துள்ளார். 34 வயதாகும் நெய்மர், பிரேசில் அணிக்காக இதுவரை 129 போட்டிகளில் விளையாடி 79 கோல்களுடன், அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைத் தன் வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.