கால்பந்து

சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி - இந்தியாவை வீழ்த்திய பிரேசில்

இந்தியா - பிரேசில் அணிகள் இடையிலான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி கொல்கத்தாவில் உள்ள சால்ட்லேக் ஸ்டேடியத்தில்ந டைபெற்றது.

கொல்கத்தா,

பிரேசில் அணி 4-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.

முதல் முறையாக மோதல்

இந்தியா - பிரேசில் அணிகள் இடையிலான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி கொல்கத்தாவில் உள்ள சால்ட்லேக் ஸ்டேடியத்தில்ந டைபெற்றது. 5 முறை உலக சாம்பியனான பிரேசில் அணி, உலக தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ளது. இந்திய அணி 138-வது இடத்தில் உள்ளது.

இரு அணிகளும் சர்வதேச போட்டியில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறையாகும். இதனால் இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

முதல் பாதியில் 2 கோல்கள்

இரவு 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில், இந்திய அணி கேப்டன் குர்பிரீத் சிங் சந்து தலைமையில் களமிறங்கியது.

சமீபத்தில் பனாமாவுக்கு எதிரான ஆட்டத்தை 1-1 என்ற கணக்கில் டிரா செய்திருந்த இந்திய அணி, கூடுதல் நம்பிக்கையுடன் பிரேசிலை எதிர்கொண்டது. ஆனால், ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் பிரேசிலின் எஸ்டேவோ வில்லியம் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

தொடர்ந்து முதல் பாதியின் கடைசி கட்டத்தில், 42-வது நிமிடத்தில் பெட்ரோ கோல் அடிக்க, பிரேசில் 2-0 என முன்னிலை பெற்றது.

இதனால் முதல் பாதியின் முடிவில் இந்திய அணி 0-2 என பின்தங்கியது.

2-வது பாதியிலும் ஆதிக்கம்

2-வது பாதியிலும் பிரேசில் அணியின் ஆதிக்கம் தொடர்ந்தது. 58-வது நிமிடத்தில் சாமுவேல் லினோ கோல் அடித்து பிரேசிலின் முன்னிலையை 3-0 என அதிகரித்தார். ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் மீண்டும் அசத்திய சாமுவேல் லினோ, 90+4-வது நிமிடத்தில் தனது 2-வது கோலை அடித்தார்.

4-0 என்ற கணக்கில் வெற்றி

இறுதியில், பிரேசில் அணி 4-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சர்வதேச நட்புறவு போட்டியில் இந்திய அணி போராடியபோதிலும், உலகின் முன்னணி கால்பந்து அணிகளில் ஒன்றான பிரேசில் தனது அனுபவத்தையும் ஆட்டத்திறனையும் வெளிப்படுத்தி வெற்றியைப் பதிவு செய்தது.

SCROLL FOR NEXT