கால்பந்து

பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் ஓய்வு பெற முடிவு

நெய்மர் இதுவரை 128 சர்வதேச போட்டிகளில் ஆடி 79 கோல்கள் அடித்துள்ளார்.

ரியோடி ஜெனீரோ,

பிரேசில் கால்பந்து அணியின் கதாநாயகனான நெய்மர் கடந்த சில வருடங்களாக முழங்கால் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். அறுவை சிகிச்சை செய்து காயத்தில் இருந்து மீண்டு வரும் அவர் வருகிற ஜூன், ஜூலை மாதம் நடைபெறும் உலகக் கோப்பை கால் பந்து போட்டிக்கு முழு உடல் தகுதியுடன் திரும்ப தன்னை தயார்படுத்தி வருகிறார். பார்சி லோனா, பி.எஸ்.ஜி., அல் ஹிலால் ஆகிய முன் னணி கிளப் அணிகளுக்காக ஆடியவரான நெய்மர் கடந்த ஆண்டு இளம் வயதில் தான் விளையாடிய சான்டோஸ் கிளப்பிற்கு திரும்பினார்.

உலகக் கோப்பைக்கு திரும்பும் உத்வேகத்துடன் இருக்கும் பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி வீரரான நெய்மர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் கால்பந்து போட்டியில் இருந்து விடைபெற முடிவு செய்துள்ளார். இது குறித்து அவர் அளித்த ஒரு பேட்டியில், “தற்போது எனது எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பது உறுதியாக தெரியவில்லை. அடுத்த ஆண்டு என்ன நடக்கும் என்பதும் தெரியாது. இப் போது நான் ஒவ்வொரு ஆண்டாக என்னுடைய உடல்நிலை குறித்து ஆய்வு செய்து அதற்கு தகுந்தபடி நடந்து வருகிறேன். அனேகமாக இந்த ஆண்டு இறுதியில் நான் ஓய்வு பெறுவேன் என்று நினைக்கிறேன். இந்த ஆண்டு மிகவும் முக்கியமானதாகும். சான்டோஸ் கிளப்பிற்கு மட்டுமின்றி. பிரேசில் அணிக்கும், எனக்கும் உலகக் கோப்பை போட்டி நடைபெறும் இந்த ஆண்டு முக்கியமானது. இந்த சீசனில் முழு உடல் தகுதியுடன் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். இதனால் சில போட்டிகளில் இருந்து ஒதுங்கினேன். இந்த ஆண்டு இறுதியில் எனது மனது என்ன சொல்கிறதோ? அதனை பொறுத்து தொடர்ந்து ஆடுவதா? இல்லையா? என்பதை முடிவு செய்வேன்” என்று தெரிவித்தார்.

34 வயதான நெய்மர் பிரேசில் அணிக்காக அதிக கோல் அடித்தவர் ஆவார். அவர் இதுவரை 128 சர்வதேச போட்டிகளில் ஆடி 79 கோல்கள் அடித்துள்ளார். 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு பிறகு அவர் காயத்தால் பிரேசில் அணிக்காக விளையாடவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.