வில்லாரியல்,
ஐரோப்பிய முன்னணி கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரான்சை சேர்ந்த பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி) அணி, வில்லாரியல் (ஸ்பெயின்) அணியை அதன் சொந்த மண்ணில் சந்தித்தது.
காயம் காரணமாக டெம்பிளே உள்ளிட்ட 4 முன்னணி வீரர்கள் இல்லாமல் களம் கண்ட போதிலும் பி.எஸ்.ஜி. அணி அசத்தியது. பந்தை அதிக நேரம் (67 சதவீதம்) தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கோலோச்சிய பி.எஸ்.ஜி. அணி 6-0 என்ற கோல் கணக்கில் வில்லாரியல் அணியை தோற்கடித்து தொடர்ச்சியாக 4-வது வெற்றியை பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது. அந்த அணியில் ஜாவோ நவெஸ் 9-வது நிமிடத்திலும், டிசையர் டோவோ 12-வது நிமி டத்திலும், சென்னி மாயில் 13-வது நிமிடத்திலும், பாபியன் ரூஸ் 17-வது மற்றும் 50-வது நிமிடத்திலும், டேவிட் பாலி 78-வது நிமிடத்திலும் கோலடித்தனர். பி.எஸ்.ஜி. அணி முதல் 17 நிமிடங்களுக்குள் 4 கோல்கள் அடித்ததன் மூலம் சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் அதிவேகமாக முதல் 4 கோல்கள் அடித்த அணி என்ற சாதனையை படைத்தது. இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு டினானோ ஜாக்ரெப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி முதல் 20 நிமிடங்களில் 4 கோல்கள் அடித்ததே சாதனையாக இருந்து வந்தது.