பெங்களூரு,
13-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் நேற்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. அணி 3-2 என்ற கோல் கணக்கில் டெல்லி ஸ்போர்ட்டிங் கிளப்பை வீழ்த்தி வெற்றியுடன் தொடரைத் தொடங்கியது. மற்றொரு ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. – கோவா அணிகள் மோதிய போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
பெங்களூருவில் உள்ள ஸ்ரீகண்டீரவா மைதானத்தில் நேற்று மாலை ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் தொடங்கியது. அடுத்த ஆண்டு மே 31-ந்தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் ஈஸ்ட் பெங்கால், முன்னாள் சாம்பியன்களான சென்னையின் எப்.சி., மோகன் பகான், பெங்களூரு எப்.சி. உள்ளிட்ட 13 அணிகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் உள்ளூர் மற்றும் வெளிமாநில மைதானங்களில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
பெங்களூருவில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. - டெல்லி ஸ்போர்ட்டிங் கிளப் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் டெல்லி அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் தாக்குதலைத் தீவிரப்படுத்திய பெங்களூரு அணி, 75-வது நிமிடத்தில் கோல் அடித்து ஆட்டத்தை 2-2 என சமன் செய்தது. தொடர்ந்து 89-வது நிமிடத்தில் பெங்களூரு வீரர் மென்னோ கோச் கோல் அடித்தார். இதனால் பெங்களூரு எப்.சி. அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கியது.
கோவாவில் உள்ள படோர்டா மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி, கோவா அணியை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தின் 64-வது நிமிடத்தில் சென்னை வீரர் இர்பான் யத்வாத் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதற்கு பதிலடியாக 75-வது நிமிடத்தில் கோவா வீரர் சிக்கி கோல் அடித்தார். அதன்பிறகு இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.