அட்லாண்டா,
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'கே' பிரிவு லீக் ஆட்டத்தில், பின்தங்கிய நிலையில் இருந்து சிறப்பாக மீண்டு வந்த காங்கோ அணி, உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5 மணிக்கு அட்லாண்டாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், தொடக்கம் முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின.
இதன் பலனாக, ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் உஸ்பெகிஸ்தான் வீரர் எல்டோர் ஷோமுரோடோவ் கோல் அடித்து அணியை 1-0 என்ற கணக்கில் முன்னிலைக்கு அழைத்து சென்றார்.
அதன்பிறகு இரு அணிகளும் பல கோல் வாய்ப்புகளை உருவாக்கினாலும், அவற்றை கோலாக மாற்ற முடியவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் உஸ்பெகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
2-வது பாதியில் சமநிலை கோலை தேடி காங்கோ அணி தீவிரமாக தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மறுபுறம் முன்னிலையை அதிகரிக்க உஸ்பெகிஸ்தானும் தொடர்ந்து முயற்சி செய்தது. அப்போது ஆட்டத்தின் 68-வது நிமிடத்தில் காங்கோவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை யோனே விஸ்ஸா துல்லியமாக கோலாக மாற்றி 1-1 என சமநிலையை ஏற்படுத்தினார்.
இதன் பின்னர் காங்கோ தனது ஆதிக்கத்தை தொடர்ந்தது. ஆட்டத்தின் 78-வது நிமிடத்தில் பிஸ்டன் மயேலே கோல் அடித்து காங்கோ அணியை 2-1 என்ற கணக்கில் முன்னிலைக்கு கொண்டு சென்றார். தொடர்ந்து யோனே விஸ்ஸா தனது 2-வது கோலை பதிவு செய்து அணியை 3-1 என முன்னிலை படுத்தினார்.
இறுதிவரை அந்த முன்னிலையை தக்கவைத்துக் கொண்ட காங்கோ அணி, 3-1 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி 3 புள்ளிகளை கைப்பற்றியது.