லண்டன்,
நடப்பு பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் ஆர்சனல் அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக இருந்தாலும், இறுதியில் மான்செஸ்டர் சிட்டி அணியே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கோல்கீப்பர் டேவிட் ஜேம்ஸ் கணித்துள்ளார்.
ஆர்சனல் அணியின் ஆட்டம் குறித்து பேசிய டேவிட் ஜேம்ஸ், "இந்த ஆண்டு பிரீமியர் லீக் பட்டத்தை வெல்ல ஆர்சனல் அணிக்கே அதிக வாய்ப்பு உள்ளது. அந்த அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது.
ஆன்பீல்டு மைதானத்தில் லிவர்பூல் அணியை அதன் சொந்த மைதானத்திலேயே வீழ்த்தியது, பயிற்சியாளர் மைக்கேல் ஆர்டெட்டா அணியை எந்த அளவுக்கு சிறப்பாக உருவாக்கியுள்ளார் என்பதைக் காட்டுகிறது. தேவையில்லாத முயற்சிகளில் ஈடுபடாமல், அடிப்படையான விஷயங்களைச் சரியாகச் செய்து வருகின்றனர்" என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், "மான்செஸ்டர் சிட்டியின் சமீபத்திய ஆட்டம் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. அந்த அணி தொடர்ந்து 7 போட்டிகளில் தோல்வியடையாமல் இருந்தது. ஆனால், திடீரென அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோல்வியடைந்தது. சிட்டி போன்ற பெரிய அணிக்கு இதுபோன்ற சரிவு வழக்கமானதல்ல.
இருப்பினும், இப்போதே அந்த அணியை பட்டத்துக்கான போட்டியில் இருந்து ஒதுக்கிவிட முடியாது. ஆர்சனல் அல்லது மான்செஸ்டர் சிட்டி ஆகிய இரண்டு அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லும்.
நான் மான்செஸ்டர் சிட்டி அணிக்காக விளையாடியவன் என்பதால், அந்த அணி மீண்டும் பட்டம் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். எர்லிங் ஹாலண்டின் சிறப்பான ஆட்டத்தின் உதவியுடன் சிட்டி அணி மீண்டு வந்து கோப்பையைக் கைப்பற்றும் என்று நம்புகிறேன்" என்றார்.
மான்செஸ்டர் சிட்டி அணி அடுத்ததாக சனிக்கிழமை நடைபெறும் போட்டியில் நாட்டிங்ஹாம் பாரஸ்ட் அணியை எதிர்கொள்ள உள்ளது.