வாஷிங்டன்,
பிபா உலகக் கோப்பை வரலாற்றின் மிகச்சிறந்த கம்பேக் ஆட்டங்களில் ஒன்றை அர்ஜென்டினா அணி பதிவு செய்துள்ளது.நேற்று இரவு அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடைபெற்ற 'சுற்று 16' (Round of 16) நாக்-அவுட் போட்டியில், ஆரம்பம் முதலே எகிப்து அதிரடி காட்டியது. 15-வது நிமிடத்தில் யாசர் இப்ராஹிம் முதல் கோலை அடித்து எகிப்தை முன்னிலை பெற செய்தார். தொடர்ந்து 67-வது நிமிடத்தில் முஸ்தபா ஜிகோ மேலும் ஒரு கோல் அடிக்க, அர்ஜெண்டினா 0-2 என்ற பின்னடைவை சந்தித்தது. இருப்பினும் இறுதிக்கட்டத்தில் அர்ஜெண்டினா அபாரமாக விளையாடியது. 79-வது நிமிடத்தில் மெஸ்சியின் உதவியுடன் கிறிஸ்டியன் ரொமேரோ கோல் அடித்து கணக்கை தொடங்கினார். அதன் பின்னர் 84-வது நிமிடத்தில் மெஸ்ஸியே ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 2-2 என சமன் செய்தார்.
கூடுதல் நேரத்தின் 90+2-வது நிமிடத்தில் என்சோ பெர்னாண்டஸ் வெற்றிக்கான கோலை அடிக்க, அர்ஜெண்டினா 3-2 என்ற கோல் கணக்கில் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அர்ஜென்டினா காலிறுதிக்கு முன்னேறியது.
போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எகிப்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஹசன் நடுவர் முடிவுகள் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
நாங்கள் அநியாயமாக ஏமாற்றப்பட்டோம். எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. எங்களுக்கு கிடைக்க வேண்டிய ஒரு பெனால்டி மறுக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, அந்த முடிவு VAR மூலம் கூட சரிபார்க்கப்படவில்லை. நாங்கள் அடித்த 2-வது கோலும் ரத்து செய்யப்பட்டது. என தெரிவித்தார்.
இந்த நிலையில், எகிப்து கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் அபோ ரிடா, போட்டி நடுவர் பிரான்சுவா லெடெக்ஸியருக்கு எதிராக பிபாவிடம் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.