வாஷிங்டன்,
உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இத்தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
அதன்படி, முதல் சுற்றின் முடிவில் சிறப்பாக ஆடிய 32 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. அதன்படி ரவுண்ட் ஆப் 32 சுற்று தற்போது நடந்து வருகிறது. இதில் வெற்றிபெறும் அணிகள் அடுத்த சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்குள் நுழையும்.
இந்நிலையில், ரவுண்ட் ஆப் 32 சுற்றில் நடைபெற்ற ஆட்டத்தில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனியை பராகுவே எதிர்கொண்டது. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்தன. இதனால் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. 90 நிமிடங்கள் முடிந்த நிலையில் இரு அணிகளும் சம நிலையில் இருந்ததால் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டன. கூடுதலாக வழக்கப்பட்ட நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டுவரப்பட்டது.
இதில், 4-3 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி பராகுவே அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு பராகுவே முன்னேறியது. பராகுவேக்கு எதிராக தோல்வியடைந்த ஜெர்மனி நடப்பு உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து வெளியேறியது.
4 முறை உலக சாம்பியனான ஜெர்மனி நடப்பு தொடரில் இருந்து வெளியேறியது ஜெர்மனி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கூடுதல் நேரத்தில் ஜெர்மனி வீரர் ஜோனதன் டா அடித்த கோலை நடுவர் ஜலால் ஜெயத் (மொராக்கோ) அனுமதிக்கவில்லை. வீடியோ நடுவர் (வி.ஏ.ஆர்.) உதவியுடன் ரீப்ளேயை ஆராய்ந்த அவர், ஜெர்மனியின் வால்டிமர், பராகுவே கோல் கீப்பர் கில்லை பவுல் செய்தது கண்டறியப்பட்டதால் அது கோல் இல்லை என்று அறிவித்தார். நடுவரின் முடிவை ஜெர்மனி முன்னாள் வீரர் தாமஸ் முல்லர் கடுமையாக விமர் சித்துள்ளார். அவர் கூறுகையில், 'நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் வி.ஏ.ஆர்.தொழில்நுட்பம் எதை பார்க்கிறது என்றே புரியவில்லை. அது என்ன மாதிரியான முடிவு? மைதானத்திலேயே மிகவும் அதிர்ஷ்டசாலி வீரராக அந்த கோல் கீப்பர் தான் இருப்பார். நான் பார்த்தவரை ஜெர்மனி மிகச்சரியான முறையில் அந்த கோலை அடித்திருந்தது. அந்த கோலை எந்த வகையிலும் மறுத்து இருக்கக்கூடாது. அது பவுல் என்றால் கால்பந்து விளையாட்டு தனது நிலைத்தன்மையை இழந்து விட்டது என்று தான் அர்த்தம். ஏனெனில் இந்த தொடர் முழுவதும் இதை விட கடுமையான மோதல்கள் அனுமதிக்கப்பட்டதை பார்த்து இருக்கிறோம்.
கள நடுவரும், வி.ஏ.ஆர். தொழில்நுட்பமும் இல்லாத ஒன்றைத் தான் தேடிக் கொண்டிருந்தனர். இது ஜெர்மனிக்கு இழைக்கப்பட்ட அநீதி. கால்பந்து உலகில் மிகப்பெரிய போட்டியில் நடந்த பகல் கொள்ளை. சிறந்த அணியிடம் தோற்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். வாய்ப்புகளை தவற விடுவதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் யாருக்கும் புரியாத ஒரு விளக்கத்தின் மூலம் கச்சிதமான ஒரு கோலை தட்டிப்பறித்திருப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. இதை விட சிறந்த நிலையில் இருப்பதற்கு ஜெர்மனி தகுதியான அணி. தொழில்நுட்பத்தால் பாதுகாக்கப்படுவதற்கு பதிலாக நாங்கள் தண்டிக்கப்பட்டது போல் உணருகிறோம்' என்றார்.