சென்னை,
2026 உலகக் கோப்பை தொடர் நிறைவடைந்த பிறகும், கேப் வெர்டே அணியின் மறக்க முடியாத தருணங்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. அதில், அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டியில் கேப் வெர்டே அணியின் சிட்னி லோபஸ் கப்ரால் அடித்த அற்புத கோல், ரசிகர்களின் வாக்கெடுப்பின் அடிப்படையில் சிறந்த கோல் விருதை வென்றுள்ளதாக பிபா அறிவித்துள்ளது.
உலகக் கோப்பையில் முதல் முறையாக பங்கேற்ற கேப் வெர்டே அணி, ரவுண்ட் ஆப் 32 சுற்றுடன் வெளியேறினாலும், தங்களது துணிச்சலான ஆட்டத்தால் கால்பந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தது. குறிப்பாக, நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டியின் கூடுதல் நேரத்தில் 2-2 என சமன் செய்ய கப்ரால் அடித்த கோல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அந்தப் போட்டியில் அர்ஜென்டினா இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றாலும், கப்ராலின் கோல் தொடரின் சிறந்த கோலாக தேர்வு செய்யப்பட்டது.