கான்சாஸ்,
23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கான்சாஸ் சிட்டியில் இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெற்ற 'ஜெ' பிரிவு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணி, அல்ஜீரியாவை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் மெஸ்சி அபாரமாக கோல் அடித்து அர்ஜென்டினாவை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற செய்தார். சமநிலையை எட்ட அல்ஜீரியா கடுமையாக போராடிய போதிலும், முதல் பாதி முடிவில் அர்ஜென்டினா முன்னிலையை தக்க வைத்து கொண்டது.
இரண்டாம் பாதியில் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்திய அர்ஜென்டினா அணிக்காக. 60-வது நிமிடத்தில் மெஸ்சி தனது இரண்டாவது கோலை பதிவு செய்து அணியின் முன்னிலையை 2-0 ஆக உயர்த்தினார்.
அதன் பின்னரும் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த மெஸ்சி, 76-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்ததுடன், அர்ஜென்டினாவின் வெற்றியையும் உறுதி செய்தார்.இதனால், 3-0 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியாவை வீழ்த்திய அர்ஜென்டினா அணி, உலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியது.
இந்த நிலையில், மெஸ்ஸி போட்டியின் முதல் கோல் அடித்ததும் மைதானத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து மெஸ்ஸி ஆனந்த கண்ணீர் விட்டார். இது தொடர்பாக மெஸ்ஸி கூறியதாவது,
இது கால்பந்துக்கும் அப்பாற்பட்டது. நான் சில கடினமான நாட்களைக் கடந்து வந்தேன். ஆனால், அந்தச் சூழலைச் சமாளிக்க எனக்குப் பெரும் வலிமையளித்தது என் அணியினர் தான், எப்போதும் என் உடனிருந்த ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் என் சக வீரர்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். என தெரிவித்தார்