வாஷிங்டன்,
2031-ம் ஆண்டு நடைபெற உள்ள பிபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரை அமெரிக்கா, மெக்சிகோ, கோஸ்டா ரிகா, ஜமைக்கா ஆகிய நான்கு நாடுகள் இணைந்து நடத்த உள்ளன. அதேபோல், 2035-ம் ஆண்டு தொடரை இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து நடத்த உள்ளதாக பிபா அறிவித்துள்ளது.
2031-ம் ஆண்டு நடைபெறும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக 48 அணிகள் பங்கேற்க உள்ளன. இதன் மூலம் மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய தொடராக இது அமைய உள்ளது. இதற்கு முன்பு 32 அணிகள் மட்டுமே போட்டியில் பங்கேற்று வந்தன.
மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் முதன்முதலில் 1991-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்றது. அப்போது 12 அணிகள் மட்டுமே பங்கேற்றன. தற்போது 35 ஆண்டுகளுக்குப் பிறகு, 2031-ம் ஆண்டு தொடரில் அணிகளின் எண்ணிக்கை 48 ஆக அதிகரிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து பிபா தலைவர் கியானி இன்பான்டினோ கூறுகையில், மகளிர் கால்பந்தை உலகளவில் வளர்ப்பதே தங்களின் முக்கிய நோக்கம் என்றார். 2031 மற்றும் 2035 உலகக் கோப்பை தொடர்கள் மைதானங்களுக்கு அப்பாலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அதிகமான பெண் வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், நடுவர்கள், நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் உருவாக இந்தத் தொடர்கள் ஊக்கமளிக்கும் என்றும் தெரிவித்தார்.