கால்பந்து

உலக கோப்பை கால்பந்து; நார்வேயை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கால்இறுதியில் நார்வேயை 2-1 என்ற கோல் கணக்கில் கூடுதல் நேரத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி அரைஇறுதிக்கு முன்னேறியது.

மியாமி,

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தி வருகிறது.உலகமே ஆவலுடன் உற்று நோக்கும் இந்த போட்டி தொடர் விறுவிறுப்பான இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. கால்இறுதியில் இருந்து போட்டிகள் அமெரிக்காவில் அரங்கேறுகின்றன.மியாமி நகரில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.30 மணிக்கு நடைபெற்ற கால்இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனும், தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியும், 31-வது இடம் வகிக்கும் நார்வேயும் மோதின.

அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதல் பாதியின் 36-வது நிமிடத்தில் நார்வே வீரர் ஆண்ட்ரியாஸ் ஸ்ஜெல்டெருப் அடித்த கோலால் அந்த அணி முன்னிலை பெற்றது. இதற்கு பதிலடியாக, முதல் பாதி கூடுதல் நேரத்தின் 2-வது நிமிடத்தில் ஜூட் பெல்லிங்ஹாம் கோல் அடித்து இங்கிலாந்தை சமநிலைக்கு கொண்டு வந்தார்.இதையடுத்து 90 நிமிடங்கள் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்ததால் ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு சென்றது.

கூடுதல் நேரத்தின் 93-வது நிமிடத்தில், நார்வே கோல் கீப்பரின் தவறை பயன்படுத்திக் கொண்ட ஜூட் பெல்லிங்ஹாம் தனது 2-வது கோலையும் பதிவு செய்து இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெறச் செய்தார். சமனுக்கு கொண்டு வர நார்வே வீரர்கள் கடுமையாக போராடினர். இங்கிலாந்து தடுப்பாட்டம் சிறப்பாக ஆடியதால் நார்வேயால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி அரைஇறுதிக்கு முன்னேறியது. அரைஇறுதியில் அர்ஜென்டினா - சுவிட்சர்லாந்து ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியை இங்கிலாந்து, எதிர்கொள்கிறது