கால்பந்து

உலகக்கோப்பை கால்பந்து: கானாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய கொலம்பியா

ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு கொலம்பியா முன்னேறியது

வாஷிங்டன்,

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இத்தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

அதன்படி, முதல் சுற்றின் முடிவில் சிறப்பாக ஆடிய 32 அணிகள் அடுத்த சுற்றான ரவுண்ட் ஆப் 32 சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றில் வெற்றிபெற்ற அணிகள் காலிறுதி சுற்றுக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இன்று நடந்த ரவுண்ட் ஆப் 32 சுற்றின் கடைசி ஆட்டத்தில் கொலம்பியா, கானா அணிகள் மோதின.

14வது நிமிடத்தில் கோல்

ஆட்டம் தொடங்கிய 14வது நிமிடத்தில் கொலம்பியா வீரர் அரியஸ் ஜான் கோல் அடித்தார். இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியா முன்னிலை பெற்றது. இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் கானா வீரர்கள் கோல் அடிக்க முயற்சித்தபோதும் அவை அனைத்தும் தோல்வியடைந்தன.

1-0

இதனை தொடர்ந்து ஆட்டத்தின் 2வது பாதியிலும் இரு அணிகளும் கோல் அடிக்க முயன்றன. ஆனால், இரு அணிகளின் முயற்சியும் தோல்வியடைந்தது. ஆட்டம் 90 நிமிடங்கள் முடிந்த நிலையில் 1-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியா தொடர்ந்து முன்னிலையில் இருந்தது.

இதையடுத்து கூடுதலாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அப்போதும், கானாவால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால், கானாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கொலம்பியா அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு கொலம்பியா முன்னேறியது. இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்த கானா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து வெளியேறியது.