கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து - விலகிய ஈரான்?...மாற்று அணி இதுவா?

அமெரிக்காவுடனான பதற்றம் காரணமாக அங்கு நடைபெறும் உலகக் கோப்பையில் பங்கேற்பது சாத்தியமில்லை என ஈரான் விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்,

உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன்-ஜூலை மாதங்களில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் 48 அணிகள் பங்கேற்கின்றன. அதில் ஈரான் ‘ஜி’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. அந்த பிரிவில் பெல்ஜியம், எகிப்து, நியூசிலாந்து ஆகிய அணிகளும் உள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக அந்த நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பது சாத்தியமில்லை என்று ஈரான் விளையாட்டுத்துறை அமைச்சர் அகமத் டோன்யமாலி தெரிவித்துள்ளார். எனினும் சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) இந்த விவகாரத்தில் ஈரானை சமாதானப்படுத்தி போட்டியில் பங்கேற்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது. ஈரான் விலகினால், உலகக் கோப்பை வரலாற்றில் 1950க்கு பிறகு முதல் முறையாக புறக்கணிப்பு நிகழ்வாக அது அமையும்.

இதற்கிடையில், ஈரான் விலகினால் அந்த இடத்தை எந்த அணி நிரப்பும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பிபா விதிகளின்படி ஆசிய மண்டலத்தில் அடுத்த சிறந்த தரவரிசையில் உள்ள அணிக்கு வாய்ப்பு வழங்கப்படும். இதன்படி ஈராக் முன்னிலைப் பெறும். அதற்கு அடுத்த இடத்தில் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளது.