2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கும் ஈரான் அணிக்கு அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக விசா வழங்கியுள்ளது.
உலகக் கோப்பையின் லீக் சுற்றுப் போட்டிகளில் ஈரான் அணி தனது ஆட்டங்களை லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சியாட்டல் நகரங்களில் விளையாட உள்ளது. வருகிற 15-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஈரான் தனது முதல் போட்டியில் களமிறங்குகிறது. அதன்பின் பெல்ஜியம் மற்றும் எகிப்து அணிகளை எதிர்கொள்ள உள்ளது.
பாதுகாப்பு காரணங்களால், ஈரான் அணி முதலில் திட்டமிட்டிருந்த அரிசோனா பயிற்சி முகாமை ரத்து செய்து, திஜுவானா நகருக்கு மாற்றியுள்ளது. அமெரிக்காவில் செலவிடும் நேரத்தை குறைக்கும் நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான தற்போதைய பதற்றம் காரணமாக, இந்த உலகக் கோப்பை தொடர் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகுந்த தீவிரத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுவரை உலகக் கோப்பை வரலாற்றில் ஈரான் 3 வெற்றிகள், 4 டிராக்கள் 11 தோல்விகளை பதிவு செய்துள்ளது. ஆனால் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி அளிப்பதில் ஈரான் திறமையான அணியாக இருந்து வருகிறது.
ஈரானின் மூன்று உலகக் கோப்பை வெற்றிகளில் மிகவும் நினைவுகூரப்படுவது 1998 உலகக் கோப்பையில் அமெரிக்க அணிக்கு எதிராக பெற்ற வெற்றியாகும். மேலும், 2018 உலகக் கோப்பையில் மொராக்கோ மற்றும் 2022 உலகக் கோப்பையில் வேல்ஸ் அணிகளை வீழ்த்தியும் ஈரான் கவனம் ஈர்த்தது.
இந்த முறை நியூசிலாந்து, பெல்ஜியம், எகிப்து ஆகிய அணிகள் அடங்கிய குழுவில் இடம்பெற்றுள்ள ஈரான், முதல் முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்ற இலக்குடன் களமிறங்குகிறது.
அரசியல் பதற்றம், பாதுகாப்பு கவலைகள் மற்றும் உலகின் பார்வை தங்கள் மீது திரும்பியுள்ள சூழலில், 15-ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை பயணத்தில் ஈரான் அணி புதிய வரலாறு படைக்குமா என்ற எதிர்பார்ப்பு கால்பந்து ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.