கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து: அல்ஜீரியாவை சாய்த்த அர்ஜென்டினா... ஹாட்ரிக் கோல் அடித்து மெஸ்சி மிரட்டல்

அர்ஜென்டினா அணி, உலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியது.

கான்சாஸ் ,

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 48 அணிகள் 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகளுடன், மூன்றாவது இடத்தைப் பெறும் சிறந்த 8 அணிகளும் இணைந்து மொத்தம் 32 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற உள்ளன.

மெஸ்சியை காண திரண்ட ரசிகர்கள்

இந்த நிலையில், கான்சாஸ் சிட்டியில் இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெற்ற ‘ஜெ’ பிரிவு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணி, அல்ஜீரியாவை எதிர்கொண்டது. 38 வயதான லியோனல் மெஸ்சி உலகக் கோப்பையில் விளையாடுவது இது ஆறாவது முறையாகும். அவரின் ஆட்டத்தை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர்.

ஆப் சைடால் மறுக்கப்பட்ட கோல்கள்

ஆட்டம் தொடங்கிய 6-வது நிமிடத்திலேயே மெஸ்சி கோல் அடித்தார். ஆனால் அது ஆப் சைட் காரணமாக செல்லாத கோலாக மாறியது. அதேபோல், 9-வது நிமிடத்தில் அல்ஜீரியா வீரர் அடித்த கோலும் ஆப் சைட் கோலாக மாறியது.

முதல் பாதியில் முன்னிலை பெற்ற அர்ஜென்டினா

இதையடுத்து, 17-வது நிமிடத்தில் மெஸ்சி அபாரமாக கோல் அடித்து அர்ஜென்டினாவை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற செய்தார். சமநிலையை எட்ட அல்ஜீரியா கடுமையாக போராடிய போதிலும், முதல் பாதி முடிவில் அர்ஜென்டினா முன்னிலையை தக்க வைத்து கொண்டது.

இரண்டாம் பாதியில் மெஸ்சியின் ஆதிக்கம்

இரண்டாம் பாதியில் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்திய அர்ஜென்டினா அணிக்காக, 60-வது நிமிடத்தில் மெஸ்சி தனது இரண்டாவது கோலை பதிவு செய்து அணியின் முன்னிலையை 2-0 ஆக உயர்த்தினார்.

அதன் பின்னரும் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த மெஸ்சி, 76-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்ததுடன், அர்ஜென்டினாவின் வெற்றியையும் உறுதி செய்தார்.

3-0 என அபார வெற்றி

இறுதி நேரம் வரை கோல் அடிக்க அல்ஜீரியா போராடிய போதிலும், அர்ஜென்டினாவின் தடுப்பாட்டத்தை உடைக்க முடியவில்லை. இதனால், 3-0 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியாவை வீழ்த்திய அர்ஜென்டினா அணி, உலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியது.

ஹாட்ரிக் கோலால் முத்திரை பதித்த மெஸ்சி

இந்த போட்டியில் மூன்று கோல்களை அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்த லியோனல் மெஸ்சி, உலகக் கோப்பை மேடையில் மீண்டும் தனது மாயாஜாலத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.