கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து - மெஸ்சி அசத்தல்... ஜோர்டானை வீழ்த்திய அர்ஜென்டினா

60-வது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறங்கிய நட்சத்திர வீரர் மெஸ்சி 80-வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.

டல்லாஸ்,

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'ஜெ' பிரிவு லீக் ஆட்டத்தில், அர்ஜென்டினா அணி, ஜோர்டானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

முதல் பாதி

இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு டல்லாஸில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், தொடக்கம் முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. இருப்பினும், அர்ஜென்டினாவே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் ஜியோவானி லோ செல்சோ கோல் அடித்து அர்ஜென்டினாவை 1-0 என்ற கணக்கில் முன்னிலைக்கு அழைத்து சென்றார்.

அதனைத் தொடர்ந்து 31-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை லவுடாரோ மார்டினஸ் துல்லியமாக கோலாக மாற்றி அணியின் முன்னிலையை 2-0 ஆக உயர்த்தினார். அதன்பிறகு இரு அணிகளும் கோல் வாய்ப்புகளை உருவாக்கினாலும், அவற்றை கோலாக மாற்ற முடியவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் அர்ஜென்டினா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

மெஸ்சி கோல்

2-வது பாதியில் முதல் கோலை தேடி ஜோர்டான் அணி தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியது. அதன் பலனாக, ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் மூசா அல்-தாமரி கோல் அடித்து ஜோர்டானின் கோல் கணக்கை தொடங்கிவைத்தார். இதையடுத்து ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறங்கிய நட்சத்திர வீரர் லியோனல் 80-வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இதன்பின் இரு அணிகளும் தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், மேலும் எந்த கோலும் பதிவாகவில்லை.

அர்ஜென்டினா வெற்றி

இறுதியில், விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினா 3-1 என்ற கோல் கணக்கில் ஜோர்டானை வீழ்த்தி 3 புள்ளிகளை கைப்பற்றியது.