கால்பந்து

உலகக்கோப்பை கால்பந்து - குரோஷியாவை வீழ்த்தி ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறிய போர்ச்சுகல்

போர்ச்சுகலுக்கு எதிராக தோல்வியடைந்த குரோஷியா நடப்பு உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து வெளியேறியது.

டொரண்டோ

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் குரோஷியாயை 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் வீழ்த்தியது.

போர்ச்சுகல் - குரோஷியா

பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து 2-வது சுற்று ஆட்டங்கள் (நாக்-அவுட் சுற்றுகள்) பரபரப்பாக நடந்து வருகின்றன. இதில், அதிகாலை 4.30 மணியளவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் போர்ச்சுகல் மற்றும் குரோஷியா அணிகள் விளையாடின.

முதல் பாதி

கனடாவின் டொரண்டோ மைதானத்தில் நடந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர். எனினும், கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால், போட்டியின் முதல் பாதியில் 0-0 என இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.

2-வது பாதி

2-வது பாதியில் இரு அணிகளும் முதல் கோலுக்காக கடுமையாக மல்லுக்கட்டின. அப்போது ஆட்டத்தின் 53-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் இவான் பெரிசிச் அணியின் முதல் கோலை பதிவு செய்தார். இதையடுத்து தாக்குதல் ஆட்டத்தை போர்ச்சுகல் தீவிரப்படுத்தியநிலையில், ஆட்டத்தின் 68-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை ரொனால்டோ கோலாக மாற்றி சமனிலை ஏற்படுத்தினார். இதையடுத்து 2-வது கோலுக்காக இரு அணிகளும் கடுமையாக போராடினாலும் அதன்பின் எந்த கோலும் பதிவாகவில்லை.

போர்ச்சுகல் வெற்றி

90 நிமிடங்கள் முடிந்த நிலையில் இரு அணிகளும் சம நிலையில் இருந்ததால் கூடுதலாக 10 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அப்போது ஆட்டத்தின் 90+4 நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் கொண்ட்சாலோ ராமோஸ் அபாரமான கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். இதையடுத்து குரோஷியாவால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் போர்ச்சுகல் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு போர்ச்சுகல் முன்னேறியது. போர்ச்சுகலுக்கு எதிராக தோல்வியடைந்த குரோஷியா நடப்பு உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து வெளியேறியது.