உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான உலகக்கோப்பை கால்பந்து தொடர் தற்போது மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளில் நடைபெற்று வருகிறது. 48 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளும், மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் சிறந்த 8 அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற உள்ளன.
குரூப் 'சி' பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹைதி மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடக்கம் முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் போட்டி விறுவிறுப்பாக அமைந்தது.
ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் ஸ்காட்லாந்து அணியின் ஜான் மெக்கின் அபாரமான கோல் அடித்து அணியை முன்னிலைக்கு கொண்டு வந்தார். இதனால் ஸ்காட்லாந்து 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அதன்பிறகு இரு அணிகளும் பல வாய்ப்புகளை உருவாக்கினாலும் கோலாக மாற்ற முடியவில்லை.
முதல் பாதி முடிவில் ஸ்காட்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. ஹைதி அணி சமநிலை கோலுக்காக போராடிய போதிலும் ஸ்காட்லாந்தின் தடுப்பாட்டம் சிறப்பாக இருந்தது.
இரண்டாவது பாதியில் ஆட்டம் மேலும் விறுவிறுப்படைந்தது. மேலும் ஒரு கோல் அடித்து முன்னிலையை அதிகரிக்க ஸ்காட்லாந்து முயன்றது. மறுபுறம் சமநிலை கோல் அடிக்க ஹைதி வீரர்கள் தீவிரமாக விளையாடினர். ஆனால் இரு அணிகளின் முயற்சிகளும் பலனளிக்கவில்லை.
இறுதிவரை எந்த அணியாலும் கோல் அடிக்க முடியாததால், ஜான் மெக்கின் முதல் பாதியில் அடித்த கோலே வெற்றியை தீர்மானித்தது. இதன் மூலம் ஸ்காட்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஹைதியை வீழ்த்தி உலகக்கோப்பை தொடரில் வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கியுள்ளது.