கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதி: இன்று பிரான்ஸ் - ஸ்பெயின் பலப்பரீட்சை

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் இன்று (இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணி) அமெரிக்காவின் டல்லாஸில் நடைபெறுகிறது. இதில் 2 முறை சாம்பியனான பிரான்ஸ், 2010 உலக சாம்பியன் ஸ்பெயினை எதிர்கொள்கிறது.

பிரான்ஸ் - ஸ்பெயின்

நடப்பு தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பிரான்ஸ், காலிறுதியில் மொராக்கோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. கேப்டன் கிலியன் எம்பாப்பே உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அந்த அணியின் பலமாக உள்ளனர்.

மறுபுறம், உறுதியான தடுப்பாட்டத்துடன் விளங்கி வரும் ஸ்பெயின், காலிறுதியில் பெல்ஜியத்தை வீழ்த்தி கடைசி நான்குக்குள் நுழைந்தது. லாமின் யமால், டேனி ஒல்மோ, ரோட்ரி உள்ளிட்டோர் அணியின் முக்கிய வீரர்களாக உள்ளனர்.

மிகுந்த எதிர்பார்ப்பு

இதுவரை இரு அணிகளும் 38 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், ஸ்பெயின் 18 வெற்றிகளும், பிரான்ஸ் 13 வெற்றிகளும் பெற்றுள்ளன; 7 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன. சமீபத்திய இரண்டு மோதல்களிலும் ஸ்பெயினே வெற்றி பெற்றுள்ளது.

விறுவிறுப்பை ஏற்படுத்தும் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.