பிலடெல்பியா ,
23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகிறது. இதில் 48 அணிகள் 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகளும், 3-வது இடத்தில் இருக்கும் சிறந்த 8 அணிகளும் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற உள்ளன. இந்த நிலையில், மெக்சிகோவின் மாண்டெரே நகரில் நடைபெற்ற ‘எப்’ பிரிவு லீக் ஆட்டத்தில் சுவீடன் மற்றும் துனிசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
போட்டி தொடங்கிய 7-வது நிமிடத்திலேயே சுவீடன் வீரர் யாசின் அவாரி கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து 30-வது நிமிடத்தில் அலெக்சாண்டர் ஐசக் மேலும் ஒரு கோலை பதிவு செய்ய, சுவீடன் 2-0 என வலுவான முன்னிலை பெற்றது.
பின்னடைவை சந்தித்த துனிசியா அணி முதல் பாதி முடிவதற்கு முன்பு கோல் அடிக்க தீவிரமாக முயற்சி செய்தது. அதன் பலனாக 43-வது நிமிடத்தில் ஓமர் ரெகிக் கோல் அடித்து அணியின் பின்னடைவை குறைத்தார். இதனால் முதல் பாதி முடிவில் சுவீடன் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியிலும் இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் சுவீடன் வீரர் விக்டர் யோகெரெஸ் கோல் அடித்து அணியின் முன்னிலையை 3-1 ஆக உயர்த்தினார். அதன்பிறகு இரு அணிகளும் பல கோல் வாய்ப்புகளை உருவாக்கியநிலையில், 84-வது நிமிடத்தில் சுவீடன் வீரர் மத்தியாஸ் ஸ்வான்பெர்க் கோல் அடித்தார். அதன் பிறகு ஆட்டம் முடியும் நேரத்தில் மீண்டும் சுவீடன் வீரர் யாசின் அவாரி மற்றொரு கோலை பதிவு செய்தார். இதன் மூலம் 5-1 என்ற கணக்கில் சுவீடன் முன்னிலை பெற்றது.
முடிவில் சுவீடன் அணி 5-1 என்ற கோல் கணக்கில் துனிசியாவை துவம்சம் செய்து உலகக் கோப்பை தொடரில் வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கியது.