கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து: அமெரிக்காவை வீழ்த்தி துருக்கி திரில் வெற்றி

அமெரிக்காவை 3-2 என்ற கோல் கணக்கில் துருக்கி வென்றது.

லாஸ் ஏஞ்சல்ஸ்,

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'டி' பிரிவு லீக் ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை துருக்கி வீழ்த்தியது.

அமெரிக்கா முன்னிலை

இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற இந்த போட்டியில், தொடக்கம் முதலே இரு அணிகளும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தின. ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் ஆஸ்டன் ட்ரஸ்டி கோல் அடித்து அணியை 1-0 என முன்னிலை பெற செய்தார்.

துருக்கி பதிலடி

பின்னடைவை சந்தித்த துருக்கி விரைவில் மீண்டு வந்தது. 10-வது நிமிடத்தில் ஆர்தா குலர் சமனிலை கோலை அடித்தார். இதனைத் தொடர்ந்து 31-வது நிமிடத்தில் ஓர்குன் கோக்சு கோல் அடித்து துருக்கியை 2-1 என்ற கணக்கில் முன்னிலைக்கு கொண்டு சென்றார். இதனால் முதல் பாதி முடிவில் துருக்கி ஒரு கோல் முன்னிலையில் இருந்தது.

வெற்றி கோல்

இரண்டாவது பாதியில் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்திய அமெரிக்கா, செபாஸ்டியன் பெர்ஹால்டர் அடித்த கோலின் மூலம் ஆட்டத்தை 2-2 என சமன் செய்தது. அதன்பிறகு வெற்றிக்கான கோலை அடிக்க இரு அணிகளும் கடுமையாக முயன்றது. அப்போது ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் துருக்கி வீரர் கான் அய்ஹான் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

துருக்கி வெற்றி

இறுதியில், பரபரப்பாக நடைபெற்ற இந்த லீக் ஆட்டத்தை 3-2 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை துருக்கி வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.