வாஷிங்டன்,
உலகில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு தொடராக உலகக்கோப்பை கால்பந்து தொடர் திகழ்கிறது. அந்த வகையில் 23வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கியது. மெக்சிகோ, கனடா, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது.
12 பிரிவுகளில் தலா 4 அணிகள் வீதம் மொத்தம் 48 அணிகள் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றுகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் - 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3வது இடத்தை பிடிக்கும் சிறந்த 8 அணிகள் என மொத்தம் 32 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும்.
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் குரூப் இ பிரிவில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் வலுவான ஜெர்மனியை கியூரசாவ் எதிர்கொண்டது.
ஆட்டம் தொடங்கிய 6வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் பெலிக்ஸ் நிமிச் கோல் அடித்தார். இதையடுத்து ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் கியூரசாவ் வீரர் லிவனோ கமெனிசியா கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை அடைந்தது.
இதையடுத்து ருத்ர தாண்டவம் ஆடிய ஜெர்மனி வீரர்கள் அடுத்தடுத்து கோல்களை அடித்தனர். அதன்படி, நிகோ ஸ்கால்டர்பெக் 38வது நிமிடத்திலும், ஹைய் ஹவெஸ்ட் 45வது நிமிடத்திலும், ஜமல் முசிலா 47வது நிமிடத்திலும், நதினில் பிரவுன் 68வது நிமிடத்திலும், டென்னிஸ் உன்தவ் 78வது நிமிடத்திலும், ஹைய் ஹவெஸ்ட் (2வது கோல்) 88வது நிமிடத்திலும் கோல் அடித்து மிரட்டினர். ஆனால், கியூரசாவ் வீரர்கள் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளை ஜெர்மனி வீரர்களும், கோல் கீப்பரும் முறியடித்தனர்.
இதன் மூலம் ஆட்டத்தின் இறுதியில் 7-1 என்ற கோல் கணக்கில் கியூரசாவை எளிதில் வீழ்த்தி ஜெர்மனி அபார வெற்றிபெற்றது. ஜெர்மனி வீரர் ஹைய் ஹவெஸ்ட் 2 கோல்களை (45வது, 88வது நிமிடங்கள்) அடித்தார்.
கரீபியனில் அமைந்துள்ள தீவு நாடு கியூரசாவ். 1.50 லட்சம் பேரை மட்டுமே மொத்த மக்கள் தொகையாக கொண்ட கியூரசாவ் நாடு உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு முதல் முறையாக தகுதிபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.