கால்பந்து

கான்சாஸ் சிட்டியில் கோல் மழை: இறுதிவரை நீடித்த பரபரப்பு... டிராவில் முடிந்த அல்ஜீரியா-ஆஸ்திரியா ஆட்டம்

இந்த லீக் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

கான்சாஸ் சிட்டி,

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'ஜெ' பிரிவில் அல்ஜீரியா - ஆஸ்திரியா மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது.

முதல் பாதி

இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு கான்சாஸ் சிட்டியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், தொடக்கம் முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. எனினும், ஆரம்பத்தில் கிடைத்த கோல் வாய்ப்புகளை இரு அணிகளும் பயன்படுத்த தவறின.

ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் ஆஸ்திரிய வீரர் மார்கோ அர்னாடோவிச் முதல் கோலை அடித்து அணியை 1-0 என்ற கணக்கில் முன்னிலைக்கு அழைத்து சென்றார். இதையடுத்து சமநிலை கோலை தேடி அல்ஜீரியா தீவிரமாக தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதன் பலனாக, முதல் பாதியின்கடைசி நேரத்தில் (45-வது நிமிடம்) ரபிக் பெல்காலி கோல் அடித்து 1-1 என சமநிலையை ஏற்படுத்தினார். இதனால் முதல் பாதி 1-1 என்ற கோல் கணக்கில் நிறைவடைந்தது.

2-வது பாதியில் கோல் மழை

2-வது பாதியிலும் இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தின. ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் மார்செல் சாபிட்சர் கோல் அடித்து ஆஸ்திரியாவை மீண்டும் 2-1 என்ற கணக்கில் முன்னிலைக்கு கொண்டு சென்றார். ஆனால், அடுத்த 5 நிமிடங்களில் அல்ஜீரியாவின் நட்சத்திர வீரர் ரியாத் மஹ்ரெஸ் பதிலடி கோல் அடித்து 2-2 என சமநிலையை ஏற்படுத்தினார். பின்னர் ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் மஹ்ரெஸ் தனது 2-வது கோலை பதிவு செய்து அல்ஜீரியாவை 3-2 என்ற கணக்கில் முன்னிலைக்கு அழைத்து சென்றார்.

ஆஸ்திரியா பதிலடி

அல்ஜீரியா வெற்றியை நெருங்கிய நிலையில், ஆட்டத்தின் இறுதி நேரத்தில் ஆஸ்திரிய வீரர் சாசா கலாஜ்ட்ஜிச் கோல் அடித்து 3-3 என சமநிலையை ஏற்படுத்தினார். இதனால், கடைசி நிமிடம் வரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த லீக் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெற்றன.