கால்பந்து

லீக் போட்டிகளில் ஆடமாட்டார், அப்புறம் நெய்மாரை அணியில் சேர்த்தது ஏன்? - பிரேசில் பயிற்சியாளர் விளக்கம்

நெய்மார், மொராக்கோவுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூ ஜெர்சி,

குரூப் ‘எப்’ பிரிவில் இடம்பெற்றுள்ள பிரேசில் அணி, நாளை நடைபெறும் தனது முதல் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் மொராக்கோவை எதிர்கொள்கிறது. தொடர்ந்து ஜூன் 19-ம் தேதி ஹைட்டி அணியையும், ஜூன் 24-ம் தேதி ஸ்காட்லாந்து அணியையும் சந்திக்க உள்ளது.

இநதற்கிடையில், பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மார், மொராக்கோவுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பிரேசில் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அணிக்கு அனுபவம் முக்கியம்

இந்நிலையில், காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத நிலையிலும் நெய்மரை உலகக் கோப்பை அணியில் சேர்த்தது குறித்து பயிற்சியாளர் அன்செலோட்டி விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில்,

"அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு நெய்மர் ஒரு சிறந்த முன்மாதிரி. அவரது அனுபவமும், வழிகாட்டுதலும் அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். நெய்மர் விரைவில் குணமடைய தீவிரமாக உழைத்து வருகிறார். அடுத்த வாரம் அவர் முழுமையான பயிற்சியில் ஈடுபடுவார் என்று நம்புகிறோம்" என்றார்.

காத்திருக்கும் ரசிகர்கள்

நெய்மர் முதல் போட்டியில் விளையாடாதது பிரேசில் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், அவர் விரைவில் உடற்தகுதியை மீட்டு அணிக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை நிலவுகிறது. உலகக் கோப்பை பட்டத்தை 6-வது முறையாக வெல்லும் இலக்குடன் களமிறங்கியுள்ள பிரேசில் அணி, தனது தொடக்க ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ளது.