கால்பந்து

"உலகக் கோப்பைக்கு பிறகே முடிவு" - ஓய்வு குறித்து மவுனம் கலைத்த ரொனால்டோ

ஓய்வு குறித்த தகவலை போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ மறுத்துள்ளார்.

போர்ச்சுக்கல்,

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடருக்குப் பிறகு சர்வதேச கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவார் என்று அவரது சகோதரி கூறியிருந்த நிலையில், அந்த தகவலை போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ மறுத்துள்ளார்.

சகோதரி என்ன கூறினார்?

குரோஷியாவுக்கு எதிரான 'ரவுண்ட் ஆப் 32' போட்டிக்கு முன்பு, ஒரு பேட்டியில் பேசிய ரொனால்டோவின் சகோதரி காட்டியா அவீரோ, "ரொனால்டோவின் ஆட்டத்தை ரசித்து கொள்ளுங்கள். இது விரைவில் முடிவுக்கு வரப்போகிறது" என்று கூறியிருந்தார்.

குரோஷியாவுக்கு எதிராக கோல்

டொராண்டோவில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் போர்ச்சுக்கல் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி 'ரவுண்ட் ஆப் 16' சுறுக்கு முன்னேறியது. இப்போட்டியில் ரொனால்டோ பெனால்டி கிக் முறையில் 1 கோலை பதிவு செய்தார்.

இப்போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரொனால்டோ,

"இது ஓய்வு பற்றி பேச வேண்டிய நேரம் அல்ல. இந்த தொடர் முடிந்த பிறகு, என் குடும்பத்தினருடன் ஆலோசித்து சரியான முடிவை எடுப்பேன்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில்,

"நான் எந்த அவசர முடிவும் எடுக்க விரும்பவில்லை. தற்போது என் முழு கவனமும் உலகக் கோப்பை தொடரிலும், போர்ச்சுகல் அணிக்கு சிறந்த பங்களிப்பை வழங்குவதிலும்தான் உள்ளது" என்று கூறினார்.