கால்பந்து

பிபா யு-15 உலகக் கோப்பை: கியூபாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த இந்தியா

இந்தியா, இந்த தொடரில் ஒட்டுமொத்தப் பட்டியலில் 87-வது இடத்தை பிடித்துள்ளது.

பாகு,

பிபா யு-15 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இந்திய அணி தனது கடைசிப் போட்டியில் கியூபாவை 6-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் பயணத்தை நிறைவு செய்தது.

இந்திய வீரர்கள் கோல் மழை

பிபா யு-15 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இந்திய அணி அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்ற தனது கடைசி ஆட்டத்தில் கியூபாவை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் இந்திய அணியின் விக்டர் லால்அவம்புயா 1 மற்றும் 23-வது நிமிடங்களிலும், நிபாஸ் மீதேய் வாகெங்பாம் 6 மற்றும் 22-வது நிமிடங்களிலும், ஆர். லால்ரெம்ருவாட்பெலா 12 மற்றும் 27-வது நிமிடங்களிலும் கோல் அடித்தனர்.

இதன்மூலம் இந்திய அணி ஒரு கட்டத்தில் 6-1 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. அதன்பிறகு கியூபா அணி தொடர்ந்து 3 கோல்களை அடித்து கம்பேக் கொடுத்தது. இறுப்பினும் இந்தியாவின் வெற்றியை தடுக்க முடியவில்லை. இறுதியில் இந்திய அணி கியூபாவை 6-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் பயணத்தை நிறைவு செய்தது.

10 போட்டிகள்

189 நாடுகள் பங்கேற்ற இந்த தொடரின் முதல் பதிப்பில் இந்திய அணி மொத்தம் 10 போட்டிகளில் விளையாடியது. இதில் லாவோஸ், கேமரூன், பஹ்ரைன், டிரினிடாட் மற்றும் டொபாகோ, கியூபா ஆகிய அணிகளிடம் வெற்றியும் செனகல், ஹோண்டுராஸ், ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான் அணிகளிடம் தோல்வியும் கண்டது. கிரெனடா அணிக்கு எதிரான ஆட்டம் டிராவில் முடிந்தது.

கடைசி ஆட்டத்தில் கியூபாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் நிறைவு செய்துள்ள இந்தியா, இந்த தொடரில் ஒட்டுமொத்தப் பட்டியலில் 87-வது இடத்தை பிடித்துள்ளது.

SCROLL FOR NEXT