கால்பந்து

20 ஆண்டுகளாக கிடைக்காத வாய்ப்பு... மீண்டும் யு20 ஆசியக் கோப்பையில் களமிறங்கும் இந்தியா

தகுதிச்சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதின.

தாஷ்கண்ட்,

யு20 ஆசியக் கோப்பை கால்பந்து தொடரின் பிரதான சுற்றுக்கு இந்திய யு20 அணி 20 ஆண்டுகளுக்குப் பிறகு தகுதி பெற்றுள்ளது.

வங்காளதேசத்தை வீழ்த்திய இந்தியா

தாஷ்கண்டில் நேற்று நடைபெற்ற குரூப் பி தகுதிச்சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதின. இப்போட்டியில் வெற்றி கட்டாயம் என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி, தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது.

போட்டியின் 25-வது நிமிடத்தில் டேனி மெய்தெய் லைஷ்ரம் கோல் அடித்து இந்தியாவை முன்னிலைப்படுத்தினார். 60-வது நிமிடத்தில் விஷால் யாதவ் அசத்தலான முறையில் கோல் அடித்து இந்தியாவின் முன்னிலையை 2-0 என உயர்த்தினார். தொடர்ந்து மாற்று வீரராக களமிறங்கிய முகமது அர்பாஷ் 79-வது நிமிடத்தில் கோல் அடிக்க, இந்தியா 3-0 என வெற்றி பெற்றது.

இந்தியா தகுதி

வங்காளதேசத்துக்கு எதிரான வெற்றியின் மூலம் இந்தியா 3 போட்டிகளில் 6 புள்ளிகளைப் பெற்றது. எனினும், தகுதி மற்றொரு போட்டியின் முடிவை சார்ந்திருந்தது.

அதன்பின்னர் நடைபெற்ற சிரியா - உஸ்பெகிஸ்தான் ஆட்டத்தில், உஸ்பெகிஸ்தான் 3-0 என்ற கோல் கணக்கில் சிரியாவை வீழ்த்தியது. இதன் மூலம் இந்தியாவின் தகுதி உறுதியானது.

குரூப் பி புள்ளிப்பட்டியல்

உஸ்பெகிஸ்தான் 9 புள்ளிகளுடன் குரூப் பி-யில் முதலிடத்தைப் பிடித்தது. இந்தியா 6 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், சிரியா 3 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும் பிடித்தன. வங்காளதேசம் புள்ளிகள் எதுவுமின்றி கடைசி இடத்தைப் பிடித்தது.

8 குழுக்களில் 2-வது இடம் பிடித்த சிறந்த 7 அணிகள் ஆசியக் கோப்பைக்கு முன்னேறும் நிலையில், இந்தியா அந்த 7 அணிகளில் ஒன்றாக இடம்பிடித்து தகுதி பெற்றது.

2006-க்கு பிறகு

இந்தியா கடைசியாக 2006-ம் ஆண்டு யு20 ஆசியக் கோப்பையில் விளையாடியது. அதன் பின்னர் 20 ஆண்டுகளாக தகுதி பெற முடியாமல் இருந்த நிலையில், தற்போது அந்த நீண்ட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

யு20 ஆசியக் கோப்பை சீனாவில் 2027-ம் ஆண்டு மார்ச் 24 முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT