கால்பந்து

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் - பெனால்டி கோலால் மாலத்தீவை வீழ்த்திய இந்தியா... அரையிறுதிக்கு முன்னேற்றம்

நடப்பு சாம்பியனான இந்திய அணி, இந்த முறையும் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

டாக்கா,

தெற்காசிய கால்பந்து (SAFF)சாம்பியன்ஷிப் தொடரில் மாலத்தீவு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

பெனால்டி மூலம் கிடைத்த வெற்றி

வங்காளதேசத்தின் டாக்காவில் உள்ள தேசிய மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணிகளும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடின. இந்திய அணி பந்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயன்றது. அதேநேரத்தில், மாலத்தீவு வீரர்கள் தற்காப்பில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் கோல் முயற்சிகளைத் தடுத்தனர்.

இதனால் முதல் பாதியில் இந்திய அணி கோல் அடிக்க முடியாத சூழல் நிலவியது. அப்போது முதல் பாதியின் இறுதியில் இந்திய அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சுஹைல் அகமது பட், இந்திய அணிக்கு முன்னிலை பெற்று தந்தார்.

இதையடுத்து மாலத்தீவு அணி பதில் கோல் அடிக்க முயற்சி செய்தது. ஆனால் அனைத்து முயற்சிகளையும் இந்திய வீரர்கள் முறியடித்தனர். இறுதியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா

ஏற்கெனவே பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி, தற்போது மாலத்தீவையும் வீழ்த்தியுள்ளது.

இதன் மூலம் தொடர்ந்து 2 வெற்றிகளைப் பெற்று 6 புள்ளிகளுடன் பி -பிரிவில் முதலிடம் பிடித்த இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

வரும் 14-ம் தேதி அரையிறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் இந்திய அணி ஏ-பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் அணியை எதிர்கொள்ளும். நடப்பு சாம்பியனான இந்திய அணி, இந்த முறையும் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

SCROLL FOR NEXT