கால்பந்து

அடுத்தடுத்து முன்னாள் உலக சாம்பியன்களை எதிர்கொள்ளத் தயாராகும் இந்திய கால்பந்து அணி

பிபா தரவரிசையில் இந்திய அணி தற்போது 138-வது இடத்தில் உள்ளது.

கொல்கத்தா,

இந்திய கால்பந்து அணி அடுத்தடுத்து முன்னாள் உலக சாம்பியன்களுடன் நட்பு ரீதியிலான போட்டியில் மோதுகிறது.

நட்பு ரீதியிலான போட்டி

இந்திய அணி வரும் செப்டம்பர் 26-ம் தேதி பெங்களூருவில் பனாமா அணியையும், அக்டோபர் 3-ம் தேதி கொல்கத்தாவில் பிரேசில் அணியையும் எதிர்கொள்கிறது. இதன் தொடர்ச்சியாக அக்டோபர் 6-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள விவேகானந்த யுவ பாரதி விளையாட்டு மைதானத்தில் உருகுவே அணியுடன் இந்திய அணி நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடுகிறது.

உருகுவே அணி 1930 மற்றும் 1950 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்றுள்ளது. 2026 உலகக் கோப்பை தொடரில் அந்த அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது. தற்போது பிபா தரவரிசையில் உருகுவே 20-வது இடத்திலும், பிரேசில் 5-வது இடத்திலும் உள்ளன.

சர்வதேச அனுபவம்

பிபா தரவரிசையில் இந்திய அணி தற்போது 138-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், உலகத் தரவரிசையில் முன்னிலையில் உள்ள அணிகளான பிரேசில் மற்றும் உருகுவேவுடன் விளையாட உள்ளது இந்திய வீரர்களுக்கு சர்வதேச அனுபவத்தை பெறுவதற்கான முக்கிய வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.