கனடா,
அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் 2026 பிபா உலகக்கோப்பையில் ஈரான் கால்பந்து அணி நிச்சயம் பங்கேற்கும் என்று சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (FIFA) தலைவர் ஜியானி இன்பான்டினோ தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் நிலவி வரும் பதற்றங்கள் காரணமாக, அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பையை ஈரான் பங்கேற்காது என்று செய்திகள் வெளியாகி வந்தநிலையில், உலகக் கோப்பையில் ஈரான் பங்கேற்கும் என்று பிபா தலைவர் கூறியுள்ளார். மேலும், கால்பந்து விளையாட்டிற்கு உலகை ஒன்றிணைக்கும் சக்தி இருப்பதாக குறிப்பிட்டார். அவர் பேசுகையில்,
" 2026 பிபா உலகக்கோப்பையில் ஈரான் நிச்சயமாகப் பங்கேற்கும். அவர்கள் அமெரிக்க மண்ணில் விளையாடுவார்கள். இதற்கான காரணம் மிகவும் எளிமையானது, நாம் மக்களை ஒன்றிணைக்க வேண்டும். கால்பந்து உலகை இணைக்கிறது. யாராவது ஒருவராவது ஒற்றுமைக்காக முயற்சி செய்யாவிட்டால் இந்த உலகம் என்னவாகும்?" என்று கூறினார்.
முன்னதாக, தங்களை தாக்கிய இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாகக் கூறி, அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என ஈரான் அறிவித்திருந்தது. இந்நிலையில், பிபா தலைவரின் இந்த அறிவிப்பு ஈரான் ரசிகர்கள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.