கால்பந்து

ஐ.எஸ்.எல்: முதல் புள்ளியை பதிவு செய்த சென்னை

நேற்று சென்னை மற்றும் ஒடிசா அணிகள் மோதின.

புவனேஷ்வர்,

2025-26 ஆம் ஆண்டுக்கான ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்று, சொந்த மற்றும் வெளியூர் மைதானங்களில் 91 ஆட்டங்களில் மோதுகின்றன.

இந்நிலையில், நேற்று சென்னை மற்றும் ஒடிசா அணிகள் மோதின. புவனேஷ்வரின் கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் மரினா மச்சான்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின.

முதல் பாதி நிறைவு நேரத்தில் பரூக் எடுத்த இன்ஸ்விங்கிங் கார்னரை எல்சின்யோ தலையால் அடித்து கோலாக மாற்றி, முதல் கோலை பதிவு செய்தார். இதற்கு பதிலடியாக 68-வது நிமிடத்தில் ஒடிஷா வீரர் கார்லோஸ் டெல்காடோ கோல் அடித்து 1-1 என சமநிலையை ஏற்படுத்தினார்.

அதன் பின் இரு அணிகளும் கோல் அடிக்காததால் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. இதன் மூலம் சென்னை அணி இந்த சீசனில் தனது முதல் புள்ளியை பெற்றது.