சென்னை,
சென்னை - பஞ்சாப் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.
இந்தியன் சூப்பர் லீக் (ISL) 2026-27 கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின.
சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் தொடக்கத்திலிருந்தே இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சி செய்தன. ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் பஞ்சாப் அணியின் நிகில் பிரபுவின் ஓன் கோல் காரணமாக சென்னை அணிக்கு 1-0 என்ற முன்னிலை கிடைத்தது.
இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
ஆனால், சென்னை அணியின் முன்னிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. முதல் பாதியின் 41வது நிமிடத்தில் பஞ்சாப் அணியின் ரபேல் மெஸ்ஸி பௌலி கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார்.
இதனால் முதல் பாதி ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
இரண்டாவது பாதியில் இரு அணிகளும் வெற்றிக்கான கோலை அடிக்க தீவிரமாக முயற்சி செய்தன. ஆனால் இரு அணிகளின் முயற்சிகளுக்கும் பலன் கிடைக்கவில்லை. இறுதிவரை மேற்கொண்டு கோல் எதுவும் பதிவாகாததால் போட்டி 1-1 என டிராவில் முடிந்தது.
இந்த முடிவின் மூலம் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் தலா ஒரு புள்ளியை பெற்றுள்ளன. சொந்த மண்ணில் வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தும் அதை தவறவிட்டதால் சென்னை ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.