புனே,
12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் இன்டர் காசி அணியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் அறிமுக அணியான சர்ச்சில் பிரதர்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி அணியை தோற்கடித்தது.
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் 2-வது நாள் ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. புனேவில் நடந்த போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் - இன்டர் காசி அணிகள் மோதின.
ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் விபின் மோகனன் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில், 90+4-வது நிமிடத்தில் ஆண்ட்ரே கிரீன் மேலும் ஒரு கோல் அடித்தார்.
இதனால் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இன்டர் காசி அணியினர் பதில் கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிகளுக்கு இறுதிவரை பலன் கிடைக்கவில்லை.
மற்றொரு ஆட்டத்தில் அறிமுக அணியான சர்ச்சில் பிரதர்ஸ், மும்பை சிட்டி அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தபோட்டியின் முடிவில் சர்ச்சில் பிரதர்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கவனம் ஈர்த்தது.
இதன் மூலம் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும், மும்பை சிட்டிக்கு அதிர்ச்சி அளித்த சர்ச்சில் பிரதர்ஸ் அணியும் தொடரில் தங்களது பயணத்தை வெற்றியுடன் தொடங்கியுள்ளன.