சென்னை,
14 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கொல்கத்தாவில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முகமதின் எஸ்.சி. - மும்பை சிட்டி அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மும்பை அணி சார்பில் சாஹில் பன்வார் 1-வது நிமிடத்திலும், ஜோதன்புயா 8-வது நிமிடத்திலும், பிராண்டன் பெர்னாண்டஸ் 79-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். மேலும் முகமதின் அணியின் சஜத் ஹுசைன் ஓன் கோல் (Own Goal) அடித்தார். முகமதின் அணி எந்த கோலும் அடிக்கவில்லை.
இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் மும்பை சிட்டி அணி 4-0 என்ற கோல் கணக்கில் முகமதின் எஸ்.சி. அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னையின் எப்.சி.-பெங்களூரு எப்.சி. அணிகள் மோதுகின்றன. சென்னை அணி 12 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 3 டிரா, 7 தோல்வியுடன் 9 புள்ளிகள் பெற்று 12-வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி 5 வெற்றி, 5 டிரா, 2 தோல்வியுடன் 20 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது.
தங்களது இறுதி லீக் ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்ய இரு அணிகளும் வரிந்து கட்டும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகளும் 17 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை 4 முறையும், பெங்களூரு 10 முறையும் வென்றுள்ளன. 3 ஆட்டம் டிராவில் முடிந்தது.