ஸ்பெயின்,
லாலிகா கால்பந்து தொடரில் வலென்சியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
லாலிகா கால்பந்து தொடரில் மெஸ்டாலா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ரியல் மாட்ரிட் - வலென்சியா அணிகள் மோதின. போட்டியின் 19-வது நிமிடத்தில் வலென்சியா வீரர் ஆரோன் மயோல் அடித்த ஷாட்டை ரியல் மாட்ரிட் கோல்கீப்பர் திபாட் கோர்ட்டுவா தாவிச் சென்று தடுத்தார்.
இதற்குப் பிறகு 28-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் வால்வெர்டே கோல் அடித்து முன்னிஅலை பெற்று தந்தார். தொடர்ந்து 36-வது நிமிடத்தில் அர்தா குலேர் 2-வது கோலை அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் ரியல் மாட்ரிட் 2-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியிலும் ரியல் மாட்ரிட் தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. வலென்சியா கோல்கீப்பர் ஸ்டோல் டிமிட்ரிவ்ஸ்கி, குலேர் மற்றும் எம்பாப்பேவின் பல கோல் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தினார்.
இருப்பினும், 75-வது நிமிடத்தில் அர்தா குலேர் கொடுத்த சிறப்பான பாஸைப் பயன்படுத்தி எம்பாப்பே கோல் அடித்தார். இதன் மூலம் அவர் தொடர்ந்து 7-வது போட்டியிலும் கோல் அடித்து அசத்தினார். இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட், தனது 8-வது தொடர் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது.