கான்சாஸ் சிட்டி,
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தொடர்ந்து 9 போட்டிகளிலும் கோல் அடித்த மெஸ்சியின் சாதனை முடிவுக்கு வந்துள்ளது.
அமெரிக்காவின் கான்சாஸ் சிட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், அர்ஜென்டினா அணி சுவிட்சர்லாந்து அணியை எதிர்கொண்டது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஜென்டினா அணி சுவிட்சர்லாந்தை 3-1 என்ற கோல் காணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
இப்போட்டியில் மெஸ்சி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதன் மூலம் மெஸ்சியின் தொடர்ச்சியான கோல் சாதனை முடிவுக்கு வந்தது. கடந்த சீசனையும் சேர்த்து உலகக்கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக 9 ஆட்டங்களில் கோல் அடித்திருந்த மெஸ்சி, இந்த ஆட்டத்தில் 120 நிமிடங்கள் முழுமையாக விளையாடியும் கோல் அடிக்க முடியவில்லை.
இருப்பினும், கோலுக்கான அசிஸ்ட்டை (Goal Assist) வழங்கினார். இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை 10 கோல்களுக்கு உதவிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
மெஸ்சியின் கோல் தொடர் முடிவுக்கு வந்தாலும், அவரது ஆட்டத்திறனும் அணிக்கான பங்களிப்பும் அர்ஜென்டினாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது.
அரையிறுதிக்கு முன்னேறியுள்ள அர்ஜென்டினா அணி, பலம் வாய்ந்த இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. இந்த ஆட்டத்திற்காக கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.