கால்பந்து

70 கோல்கள்... எகிப்து கால்பந்தில் புதிய வரலாறு படைத்த முகமது சலா

ஹொசாம் ஹசான் 69 கோல்களுடன் முதலிடத்தில் இருந்தார்.

கெய்ரோ,

70 கோல்கள் அடித்து எகிப்து கால்பந்து வரலாற்றில் புதிய வரலாறு படைத்துள்ளார் முகமது சலா.

5-0 என எகிப்து அபார வெற்றி

2027-ம் ஆண்டு ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் எகிப்து - மலாவி அணிகள் மோதின. கெய்ரோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய எகிப்து அணிக்கு, 6-வது நிமிடத்தில் நாசர் மஹர் முதல் கோல் அடித்தார்.

தொடர்ந்து 10-வது நிமிடத்தில் ஓமர் மர்மூஷும், முதல் பாதி முடிவதற்கு முன்பாக முகமது ஹானியும் கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் எகிப்து அணி 3-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த எகிப்து அணிக்கு, ஆட்டத்தின் 83-வது நிமிடத்தில் சலா கோலடித்தார். பின்னர் ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சலா சரியாக பயன்படுத்தி கோல் அடித்தார். இறுதியில் எகிப்து அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தகுதிச் சுற்று குரூப் பி பிரிவில் 3 ஆட்டங்களில் 7 புள்ளிகளுடன் எகிப்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. மலாவி அணி 3 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

சலாவின் சாதனை

இப்போட்டியில் 2 கோல்கள் அடித்ததன் மூலம், எகித்து அணிக்காக 70 சர்வதேச கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை சலா படைத்துள்ளார். இதற்கு முன்பு ஹொசாம் ஹசான் 69 கோல்களுடன் முதலிடத்தில் இருந்தார். தற்போது சலா அவரை முந்தி முதலிடம் பிடித்துள்ளார்.

SCROLL FOR NEXT