கால்பந்து

உலகக்கோப்பை கால்பந்து: நெதர்லாந்தை வீழ்த்தி மொராக்கோ அபார வெற்றி

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் 0-0 என்ற நிலையில் இருந்தன.

மெக்சிகோ,

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இத்தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

அதன்படி, முதல் சுற்றின் முடிவில் சிறப்பாக ஆடிய 32 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. அதன்படி ரவுண்ட் ஆப் 32 சுற்று தற்போது நடந்து வருகிறது. இதில் வெற்றிபெறும் அணிகள் அடுத்த சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்குள் நுழையும்.

இந்நிலையில், உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ரவுண்ட் ஆப் 32 சுற்றில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்து , மொராக்கோ அணிகள் மோதின.

மெக்சிகோவில் நடந்த இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சித்தன. ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. இதனால், ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் 0-0 என்ற நிலையில் இருந்தன.

1-1

இதையடுத்து, 2ம் பாதியில் ஆட்டம் சூடுபிடித்தது. ஆட்டத்தின் 72வது நிமிடத்தில் நெதர்லாந்து கோல் அடித்தது. இதனால், 1-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 90 நிமிடங்கள் முடிந்த நிலையில் 1-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து முன்னிலையில் இருந்தது. இதையடுத்து கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அப்போது, ஆட்டத்தின் 91வது நிமிடத்தில் மொராக்கோ கோல் அடித்தது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றன.

இதனை தொடர்ந்து ஆட்டத்தில் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. ஆனால், கூடுதலாக வழங்கப்பட்ட 30 நிமிடத்திலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால், 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.

பெனால்டி ஷூட் அவுட்

இதையடுத்து, வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை அமல்படுத்தப்பட்டது. பரபரப்பாக நடந்த பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி மொராக்கோ அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்குள் மொராக்கோ நுழைந்தது. அதேவேளை, வலுவான நெதர்லாந்து அணி நடப்பு உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து வெளியேறியது.