கால்பந்து

உலகக்கோப்பை கால்பந்து: பிரேசில் - மொராக்கோ ஆட்டம் டிரா

ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் இஸ்மாயில் சய்பரி கோல் அடித்தார்.

வாஷிங்டன்,

உலகில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு தொடராக உலகக்கோப்பை கால்பந்து தொடர் திகழ்கிறது. அந்த வகையில் 23வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கியது. மெக்சிகோ, கனடா, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது. 12 பிரிவுகளில் தலா 4 அணிகள் வீதம் மொத்தம் 48 அணிகள் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றுகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் - 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3வது இடத்தை பிடிக்கும் சிறந்த 8 அணிகள் என மொத்தம் 32 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும்.

பிரேசில் - மொராக்கோ

இந்நிலையில், உலகக்கோப்பை கால்பந்து தொடரில் குரூப் சி பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பிரேசில் - மொராக்கோ அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் இஸ்மாயில் சய்பரி கோல் அடித்தார். இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ முன்னிலை பெற்றது.

இதையடுத்து ஆட்டம் சூடுபிடித்த நிலையில் 32வது நிமிடத்தில் பிரேசில் வீரர் வினிசியஸ் ஜுனியர் கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் தலா 1 கோலுடன் சம நிலை பெற்றது. இதனை தொடர்ந்து ஆட்டத்தின் 2வது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டன. ஆனால், அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.

1-1

ஆட்டத்தின் 90 நிமிடங்களும் நிறைவடைந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்ததால் கூடுதலாக 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. ஆனால், கூடுதலாக ஒதுக்கப்பட்ட நேரத்திலும் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் பிரேசில் - மொராக்கோ ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.