கால்பந்து

சர்வதேச கால்பந்தில் இருந்து கண்ணீருடன் விடைபெற்ற நெய்மார்

பிரேசில் அணிக்காக 129 போட்டிகளில் விளையாடிய நெய்மார், 80 கோல்களை அடித்துள்ளார்.

நியூஜெர்சி,

பிரேசில் கால்பந்து வரலாற்றின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான நெய்மார், 2026 பிபா உலகக் கோப்பையில் பிரேசில் அணி நார்வேயிடம் தோல்வியடைந்து வெளியேறியதை தொடர்ந்து, சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பிரேசில் - நார்வே

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 3-வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இன்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் பிரேசில் - நார்வே அணிகள் மோதின. இப்போட்டியில் நார்வே 2-1 என்ற கோல் கண்க்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

ஓய்வு

தோல்விக்கு பின் கண்ணீருடன் மைதானத்தில் காணப்பட்ட நெய்மார், சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். "நான் முயற்சித்தேன், தொடர்ந்து முயற்சித்தேன், ஆனால் இப்போது எல்லாம் முடிந்துவிட்டது. நான் இங்கேயே தொடங்கினேன், இங்கேயே முடிக்கிறேன்’ என்று கூறினார்.

பிரேசில் அணிக்காக 129 போட்டிகளில் விளையாடிய நெய்மார், 80 கோல்களை அடித்து, அந்த நாட்டின் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையுடன் தனது சர்வதேச பயணத்தை முடித்துள்ளார். இதன்மூலம், 16 ஆண்டுகள் நீண்ட அவரது சர்வதேச கால்பந்து பயணம் நிறைவுக்கு வந்துள்ளது.

மெட்லைப் மைதானத்தில் இறுதிப் போட்டி

2010-ம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமான அதே மெட்லைப் மைதானத்திலேயே நெய்மார் தனது கடைசி போட்டியையும் விளையாடி இருக்கிறாார். நார்வேக்கு எதிரான ஆட்டத்தில் மாற்று வீரராக களமிறங்கிய அவர், பெனால்டி மூலம் ஒரு கோல் அடித்தார். இருப்பினும், அந்த கோல் பிரேசில் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்ற போதுமானதாக அமையவில்லை.

கண்ணீருடன் விடைபெற்ற நெய்மர்

நார்வேயிடம் தோல்வியடைந்து உலகக் கோப்பையில் இருந்து பிரேசில் வெளியேறியதால் நெய்மார் மிகவும் வேதனையடைந்தார். இறுதி விசில் ஒலித்தவுடன் மைதானத்திலேயே கண்ணீர் மல்க நின்ற அவர், உணர்ச்சிவசப்பட்டு அழுத காட்சி ரசிகர்களை உருக்கத்தில் ஆழ்த்தியது.

அவரை சக வீரர்கள் ஆறுதல் கூறி தேற்ற முயன்றபோதிலும், உலகக் கோப்பை கனவு நொறுங்கிய ஏமாற்றத்தில் நெய்மார் மனமுடைந்து காணப்பட்டார்.

நீளும் பிரேசிலின் காத்திருப்பு

இந்த தோல்வியால், உலகக் கோப்பையை ஆறாவது முறையாக வெல்லும் பிரேசிலின் கனவு மீண்டும் தள்ளிப்போயுள்ளது. கடைசியாக 2002-ம் ஆண்டு ஜப்பான்-தென் கொரியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையை வென்ற பிரேசில், அதன் பின்னர் மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற முடியாமல் தவித்து வருகிறது. தற்போது அந்த காத்திருப்பு கால் நூற்றாண்டை கடந்தும் தொடர்கிறது.