கால்பந்து

ரொனால்டோவை சஸ்பெண்ட் செய்த போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு

அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

லிஸ்பான்,

போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அந்நாட்டு கால்பந்து கூட்டமைப்பு 30 நாட்கள் விளையாடத் தடை விதித்துள்ளது. தேசிய அணியின் பயிற்சி முகாமிலிருந்து வெளியேறிய விவகாரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே இந்தச் சம்பவத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. நார்வே அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ மாற்று வீரராக அமர வைக்கப்பட்டார். போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்த்து அவர் பயிற்சியில் ஈடுபட்டபோதும், இறுதியில் களமிறக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவர், டென்மார்க் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக கோபன்ஹேகனில் இருந்த போர்ச்சுகல் அணியின் பயிற்சி முகாமிலிருந்து வெளியேறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு ஒழுங்கு நடவடிக்கையைத் தொடங்கி விசாரணை நடத்தியது. தேசிய அணியின் முகாமிலிருந்து வெளியேறியது விதிமீறல் எனக் கருதப்பட்டதால், ரொனால்டோவுக்கு 30 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தனது செயலுக்காக ரசிகர்களிடமும் அணியின் சக வீரர்களிடமும் ரொனால்டோ மன்னிப்புக் கோரியிருந்தார். மேலும், தனக்கு விதிக்கப்படும் தண்டனையை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், ரொனால்டோ மீண்டும் போர்ச்சுகல் அணிக்குத் திரும்ப வேண்டும் என்பதே கூட்டமைப்பின் விருப்பமாக உள்ளது. போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் பெட்ரோ ப்ரோயென்சா, ரொனால்டோ மீண்டும் அணியில் இணைவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். எனவே, இந்தத் தடை விவகாரம் முடிவுக்கு வந்த பிறகு அவர் மீண்டும் தேசிய அணிக்காக விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT