ரியாத் ,
அல்-நாசர் அணிக்காக ரொனால்டோ புதிய சாதனை படைத்துள்ளார்.
ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் உயர்மட்ட சாம்பியன்ஸ் லீக் தொடரின் லீக் சுற்றுப் போட்டியில் அல்-நாசர் - அல்-சாத் அணிகள் மோதின.
ரியாத்தில் உள்ள தனது சொந்த மைதானத்தில் களமிறங்கிய அல்-நாசர் அணிக்கு, ஆட்டத்தின் 13-வது நிமிடத்திலேயே பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை ரொனால்டோ சரியாக பயன்படுத்தி கோலாக மாற்றினார். இதனால் ஆட்டத்தின் துவக்கத்திலேயே அல்-நாசர் அணி முன்னிலை பெற்றது.
இந்த கோலுடன் ஆசிய சாம்பியன்ஸ் லீக் எலைட் தொடரில் அல்-நாசர் அணிக்காக ரொனால்டோ அடித்த கோல்களின் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்தது. இதன்மூலம் 16 கோல்கள் அடித்திருந்த மொராக்கோ வீரர் அப்தர்ரசாக் ஹம்தல்லாவை முந்தி, அல்-நாசர் அணியின் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
தொடர்ந்து ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் முகமது வாத் கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டுவந்தார். இதனால் முதல் பாதி 1-1 என்ற கோல் கணக்கில் முடிந்தது.
இரண்டாவது பாதியில், 52-வது நிமிடத்தில் ஜோவோ பெலிக்ஸ் பைசைக்கிள் கிக் முறையில் அபாரமாக கோல் அடித்தார். இதன்மூலம் அல்-நாசர் அணி 2-1 என முன்னிலை பெற்றது. இதையடுத்து இரு அணிகளின் கோல் முயற்சிகளும் பலனளிக்கவில்லை. இதனால் அல்-நாசர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.